திங்கட்கிழமை (நவம்பர் 2) காலை சாங்கி விமான நிலையத்தின் சில தானியங்கிப் பயணப் பதிவு இயந்திரங்களில் தற்காலிகத் தொழில்நுட்பத் தடை ஏற்பட்டது. இதனால் விமான நிலைய முனையங்களில் பயணிகளால் சுயமாகப் பயணப் பதிவு செய்யவோ அல்லது விமானத்துக்குள் நுழையத் தேவையான சீட்டுகளை அச்சிடவோ இயலவில்லை.
காலை 8.30 மணியளவில் பயணிகளுக்கான செயல்முறை கட்டமைப்பில் ஏற்பட்ட உலகளாவிய சேவைத் தடை காரணமாக இந்நிலை உருவானதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட சில விமான நிறுவனங்கள் பயணப் பதிவு நடைமுறைகளைக் கைமுறையாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்ற விமான நிலையங்களும் இதேபோன்று பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறைந்தது இரண்டரை மணி நேரத்திற்கு நீடித்தது. பின்னர், பாதிக்கப்பட்ட அனைத்து விமான நிறுவனங்களின் பயணப் பதிவு நடைமுறைகளும் காலை 11 மணியளவில் வழக்கநிலைக்குத் திரும்பின.
இக்காலக்கட்டத்தில் விமான நிலைய முன்கள ஊழியர்கள், களத்தில் விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கினர். காலை 10 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சாங்கி விமான நிலையத்துக்குச் சென்று பார்த்தபோது, பல்வேறு முனையங்களிலிருந்த சில தானியங்கிப் பயணப் பதிவு இயந்திரங்கள் செயல்படாமல் இருந்தன.
குறிப்பாக முனையம் 3ல், ‘கருடா இந்தோனீசியா’ விமான நிறுவனத்தின் சேவை முகப்புகளிலிருந்த தானியங்கி இயந்திரங்கள் முற்றிலும் முடங்கிக் கிடந்தன. இதனால் காலை 11.45 மணிக்கு ஜகார்த்தா புறப்பட வேண்டிய ஜிஏ829 விமானப் பயணிகள், விரைவான பயணப்பெட்டிச் சரிபார்ப்பிற்காகத் தனி வரிசையில் வழிநடத்தப்பட்டனர்.
அதே நேரத்தில், முனையம் 3ல் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணப் பதிவு முகப்புகளின் இயந்திரங்கள் வழக்கம் போல் இயங்கின. முனையம் 4ல், கொரியன் ஏர், கேத்தே பசிபிக் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிசைகளிலிருந்த தானியங்கிப் பயணப் பதிவு இயந்திரங்கள் காலை 10.30 மணியளவில் செயலிழந்து காணப்பட்டன.
அவற்றின் திரைகளில் ‘சிறிது நேரம் ஓய்வு எடுக்கப்படுகிறது' என்ற வாசகம் தென்பட்டது. சன் பூகுவோக் ஏர்வேஸ் இயந்திரங்களும் இயங்கவில்லை. இதனால் காலை 11.25 மணியளவில் ஏறத்தாழ பத்து பயணக் குழுக்கள் கைமுறைப் பயணப் பதிவு முகப்புகளின் வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.
பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் அறிவித்ததற்குப் பிறகு, பிற்பகல் 12.30 மணியளவில் முனையம் 1க்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது, பெரும்பாலான தானியங்கிப் பயணப் பதிவு இயந்திரங்கள் சீராக இயங்கிக்கொண்டிருந்தன.
