வாகன ஓட்டுநர்களும் பயணிகளும் வாகனத்தில் இருந்தவாறே குடிநுழைவு அனுமதியைப் பெறும் முழுமையான தானியக்க முறையை துவாஸ் சோதனைச் சாவடியில் சோதித்துப் பார்க்க இருப்பதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
கார், சரக்கு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோர் அந்தத் தானியக்கக் குடிநுழைவு அனுமதியைப் பெறும் வகையில் அடுத்த சில மாதங்களுக்குப் புதிய முறை சோதித்துப் பார்க்கப்பட உள்ளதாக ஆணையம் வெள்ளிக்கிழமை (மே 8) கூறியது.
தானியக்க பயணி அனுமதி முறையில் (APCS) கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி ஓட்டுநர்களும் பயணிகளும் குடிநுழைவு அனுமதியைப் பெறமுடியும். அல்லது அந்த தானியக்க முறைக்காக உருவாக்கப்படும் தடங்களின் கடவுச்சீட்டு சோதனை இயந்திரங்களைப் பயன்படுத்தியும் அவர்கள் குடிநுழைவு அனுமதியைப் பெறலாம்.
அந்த இயந்திரங்களில் முக அடையாள சரிபார்ப்புக்காக கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். காரிலிருந்தவாறே அந்த இயந்திரங்களை அணுக இயலாத வேளைகளில், அங்க அடையாளச் சோதனைத் தொழில்நுட்பத்துடனான கைக்கணினி வாயிலாகவும் குடிநுழைவுச் சோதனை அனுமதிக்கு முயற்சிக்கலாம். அத்தகையை கைக்கணினிகள் அந்தத் தடங்களில் இருக்கும்.
ஆக, எந்தவொரு சூழ்நிலையிலும் குடிநுழைவு அனுமதியைப் பெற குடிநுழைவு அதிகாரியை நேரில் அணுகவேண்டிய அவசியம் ஏற்படாது.
“அந்தத் தானியக்க முறை நடப்புக்கு வரும்போது, அந்தப் பணிகளைச் செய்துவரும் அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் கொண்ட பணிகளில் அமர்த்தப்படலாம். ஆள் அடையாளம் கண்டறிதல், விசாரணை நடத்துதல் போன்ற பணிகளுக்கு அவர்களை மாற்றுவதன் மூலம் ஆணையத்தின் ஒட்டுமொத்த எல்லைப் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்த இயலும்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தானியக்க முறை அடுத்த சில மாதங்களுக்குச் சோதித்துப் பார்க்கப்படும்போது அவற்றைப் பயன்படுத்துவோரிடம் இருந்து கருத்துகள் திரட்டப்படும். புதிய தானியக்க முறையின் இயக்கமுறை ஆற்றலைச் சீர்செய்ய அந்தக் கருத்துகள் பயன்படுத்தப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
நிலவழிச் சோதனைச் சாவடிகளில் தானியக்கக் குடிநுழைவு அனுமதிக்கான தனித் தடங்கள் கட்டங்கட்டமாக ஏற்படுத்தப்படும் என்று ஆணையம் கடந்த 2024ஆம் ஆண்டு அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சோதனை வெற்றிகரமாக நிறைவுபெற்றதும் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துவாஸ் சோதனைச் சாவடியில் அந்தத் தானியக்க அனுமதி முறை படிப்படியாக அமல்படுத்தப்படும். அதன் பின்னர் அது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு விரிவடையும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
ஆணையத்தின் வருடாந்திர வேலைத் திட்டக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம், வருங்காலக் குடிநுழைவு முறை எல்லைப் பாதுகாப்பிற்கான சிறந்த திட்டங்களை ஆணையம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றார்.
அந்தக் கருத்தரங்கு மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற்றது.

