பொங்கோலில் முதலாவது தானியக்க இணைப்பு வாகன வழித்தடம் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.
அந்த 10 கிலோமீட்டர் நீள வழித்தடமானது மட்டில்டா கோர்ட், பொங்கோல் குளோவர் குடியிருப்பாளர்களை, ஒயேசிஸ் டெரசஸ் பகுதியிலுள்ள பலதுறை மருந்தகத்தை பொங்கோல் பிளாசா வழியாக இணைக்கும். ஒரு சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்ய 35 நிமிடங்கள் ஆகும்.
குவோங்சோவைச் சேர்ந்த தானியக்க வாகன நிறுவனமான வீரைடு (WeRide) உடன் இணைந்து கிராப் நிறுவனம் அந்தப் பேருந்துச் சேவையை இயக்கும்.
பொங்கோலில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மூன்று தானியக்க இணைப்பு வாகன வழித்தடங்களில் இது முதலாவது.
இப்போதுள்ள பொதுப் போக்குவரத்துத் தெரிவுகளால் பொங்கோலில் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளை அவை உள்ளடக்கும். இதன்மூலம் அப்பகுதிவாசிகள் 15 நிமிடப் பயண நேரத்தைச் சேமிக்க இயலும்.
ஒளிரும் ஊதா நிறத்திலான, ஐந்து மற்றும் எட்டு இருக்கைகள் கொண்ட வாகனங்கள் அத்தடங்களில் இயக்கப்படும்.
பொங்கோலில் தானியக்க வாகன முன்னோட்டச் சோதனைகளுக்குத் தொழிற்சங்கத் தலைவர்களை வரவேற்றதாகத் திருவாட்டி சுன் புதன்கிழமை (ஜனவரி 7) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அந்த முதலாவது வழித்தடத்தில், தானியக்க வாகனங்கள் எவ்வித அசம்பாவிதமும் இன்றி, 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தைப் பாதுகாப்பாகக் கடந்தன என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“தானியக்க இணைப்பு வாகனங்களில் சென்று பார்க்க இந்த மாதத்திலிருந்து முக்கிய அடித்தளத் தலைவர்கள், நிறுவனப் பங்காளிகள் போன்ற உரிய பங்காளிகளை வரவேற்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பயண அனுபவத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளைச் சேகரிக்க இத்தகைய சமூகப் பயணங்கள் தனக்கு உதவும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
பொங்கோலில் 2025 அக்டோபர் நடுப்பகுதியில் முதன்முதலாகத் தானியக்க வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்குத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று தானியக்க வாகன வழித்தடங்களில் இரண்டை கிராப் நிறுவனமும் எஞ்சிய ஒன்றை கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனமும் இயக்கும்.

