பொங்கோல் வட்டாரத்தில் தானியங்கி வாகனச் சேவைக்கான சோதனைத் திட்டத்தை கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனமும் கிராப் நிறுவனமும் நடத்தி வருகின்றன. அவ்வட்டாரத்தில் வர்த்தக ரீதியிலாகத் தானியங்கி வாகனச் சேவையைத் தொடங்குவதற்கு முன்னதாக இந்தச் சோதனைத் திட்டம் நடத்தப்படுகிறது.
அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான கம்ஃபர்ட்டெல்குரோவின் சோதனைத் திட்டம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. அதில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இத்தானியங்கி வாகனச் சேவை திறந்துவிடப்படுவதற்கு முன்னதாக, அதைப் பயன்படுத்தி பார்க்க பொங்கோல் குடியிருப்பாளர்கள் சிலருக்கும் அடித்தள அமைப்புத் தலைவர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தானியங்கி வாகனச் சேவைகளைப் பெற பொதுமக்கள் எப்போது பதிவு செய்யலாம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இதுகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் கம்ஃபர்ட்டெல்குரோ அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கிராப் நிறுவனம் அதன் தானியங்கி வாகனச் சேவை மூலம் 5,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்குச் சேவை வழங்கி உள்ளது. தனது தானியங்கி வாகனச் சேவை இதுவரை 60,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பதிவு செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) தெரிவித்தார்.
அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய தானியங்கி வாகனச் சேவைத் திட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. கிராப் நிறுவனத்தின் இடைவழித் தானியங்கி வாகனச் சேவையைப் பொதுமக்கள் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணம் வசூலிக்கப்படும் தானியங்கி வாகனச் சேவைகள் தொடரும் தேதி குறித்து கிராப் நிறுவனம் தகவல் வெளியிடவில்லை.
இச்சேவை இவ்வாண்டின் நடுப்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
கட்டண வசூலிக்கப்படும் சேவை தொடங்கியதும் ஒவ்வொரு பயணியும் $4 செலுத்த வேண்டும் என்று கிராப் கூறியது. கட்டணத் தொகையை இன்னும் நிர்ணயிக்கவில்லை என்று கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்துள்ளது.

