சிங்கப்பூர் மக்களின் சராசரி ஆயுட்காலம் 2025ஆம் ஆண்டில் 83.9 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இது, அதற்கு முந்திய ஆண்டில் 83.7 ஆண்டுகளாக இருந்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முந்தைய உச்சமான 2019ஆம் ஆண்டின் ஆயுட்கால அளவையும் தாண்டியுள்ளது. இந்தத் தகவல் சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை புதன்கிழமை (ஜூன் 3) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, சிங்கப்பூரில் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிடத் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.
2025ஆம் ஆண்டில் 65 வயதை எட்டியவர்கள் 86.6 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 0.2 ஆண்டுகளும் 2015ஆம் ஆண்டுகளில் 0.8 ஆண்டுகள் அதிகம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் 65 வயதை எட்டிய ஆண்கள் 84.9 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே ஆண்டில் 65 வயதை எட்டிய பெண்கள் 88.1 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 81.8 ஆண்டுகளாகவும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 86 ஆண்டுகளாகவும் பதிவாகின. ஆண்களைப் பொறுத்தவரை, 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 0.3 ஆண்டு அதிகம். பெண்களைப் பொறுத்தவரை இது 0.2 ஆண்டு அதிகம்.
கடந்த பத்து ஆண்டுகளில், ஆண்களின் ஆயுட்காலம் 1.3 ஆண்டும் பெண்களின் ஆயுட்காலம் 0.9 ஆண்டும் கூடியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் உயிர்வாழும் விகிதமும் 2015ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் பிறந்த பெண் குழந்தைகளில் 94.4 விழுக்காட்டினர் 65 வயதை எட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விகிதம் 2015ஆம் ஆண்டில் 93.6 விழுக்காடாக இருந்தது.
அதுபோல, சென்ற ஆண்டில் பிறந்த ஆண் குழந்தைகளில் 90.3 விழுக்காட்டினர் 65 வயதை எட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டில் இது 89 விழுக்காடாக இருந்தது.
2021ஆம் ஆண்டில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாகச் சிங்கப்பூரர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து, வரலாற்றிலேயே முதல்முறையாக ஆயுட்காலம் சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த நிலை மாறி, ஆயுட்காலம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

