குளிரூட்டும் சாதனங்களை அதிகம் சார்ந்திருக்கும் மக்கள் வசிக்கும் நாடாக சிங்கப்பூர் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் இரவில் படுக்கையறைகளின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட 28 டிகிரி செல்சியசாக இருந்துவருகிறது என்ற தகவல் வியப்பூட்டும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
150 குடியிருப்பாளர்களைக் கொண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இரவு வேளைகளில் படுக்கையறைகளின் வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியசாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வெப்பநிலை, தரமான உறக்கத்துக்குத் தேவையானதைவிட அதிகமானதாகும்.
சிங்கப்பூரின் சராசரி வெப்பநிலை
ஓராண்டுக்கு சிங்கப்பூரின் சராசரி வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாக இருந்துவருகிறது.
பொதுவாக நல்ல உறக்கத்துக்குத் தேவையான வெப்பநிலை 20 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகம் இருக்கக்கூடாது என்கின்றனர் வல்லுநர்கள் சிலர். அதேவேளை, இதுபோன்ற உச்சவரம்புகள் பொதுவாக குளிர்காலத்தை அனுபவிக்கும் பகுதிகளில் வரையப்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் போதுமான உறக்கம் இல்லாமல் ஆக அதிகமாகத் தவிப்போரில் சிங்கப்பூரர்களும் அடங்குவர் என்று பல அறிக்கைகள் தெரிவித்துள்ளன. பருவநிலை மாற்றத்தால் சிங்கப்பூரில் இரவுநேர வெப்பநிலையும் அதிகரித்துவருகிறது.
ஹீட்ஸ் ஆய்வு
2050ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் குறைந்தது 317 நாள்களில் இரவுநேர வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று தேசிய பருவநிலை மாற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம் அகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஹீட்ஸ் என்றழைக்கப்படும் மூவாண்டு ஆய்வை மேற்கொண்டனர். தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் ‘கிரியேட்’ திட்டம் அதற்கு நிதியுதவி அளித்தது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘கிரியேட்’ வல்லுநர் மாநாட்டில் வியாழக்கிழமை (ஜூன் 25) ஊடகத்தினரிடம் படைக்கப்பட்ட பல்வேறு ஆய்வுத் திட்டங்களில் மூவாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஹீட்சும் அடங்கும்.
இவ்வாண்டின் ‘கிரியேட்’ மாநாடு பருவநிலை, சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. இவை, தேசிய அளவில் கவலை தரும் அம்சங்கள் என்று மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவர் ஹெங் சுவீ கியட் குறிப்பிட்டார்.

