விபத்து காரணமாக ஜோகூரில் துவாஸ் இரண்டாம் இணைப்புக்கு அருகே லாரி ஒன்றிலிருந்து ரசாயனம் இருந்த கொள்கலன் கடலுக்குள் கவிழ்ந்தது.
அதனால் ராஃபிள்ஸ் மரினாவின் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய துவாஸ் இரண்டாம் இணைப்பைச் சுற்றிய பகுதிகளில் நீச்சல், பொழுதுபோக்குக்காக மீன்பிடித்தல் போன்ற நீர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) வியாழக்கிழமை (ஜூலை 24) பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. மலேசியாவில் இருக்கும் துவாஸ் இரண்டாம் இணைப்புப் பகுதியில் இரண்டு கனரக லாரிகள் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து புரோப்பிலீன் கிலைக்கோல் (propylene glycol) ரசாயனம் இருந்த லாரி கொள்கலன் கடலுக்குள் விழுந்தது.
இச்சம்பவம் வியாழக்கிழமை மாலை 5.41 மணிக்கு நிகழ்ந்தது.
விபத்தில் ஈடுபட்ட மற்றொரு லாரி சீராக இருப்பதைத் தாங்கள் அறிவதாகவும் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் எந்த ரசாயனக் கசிவும் ஏற்படவில்லை என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
புரோப்பிலீன் கிலைக்கோல், அபாயகரமான பொருளாக வகைப்படுத்தப்படவில்லை. அந்த ரசாயனம், பொதுவாக உணவு, மருந்து வகைகள், ஒப்பனைப் பொருள்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒன்று என தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
எனினும், புரோப்பிலீன் கிலைக்கோல், லிம் சூ காங் மீன் பண்ணைப் பகுதியில் நீரில் இருக்கும் ஆக்சிஜன் அளவைக் குறையச் செய்யக்கூடியது என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது.
விழிப்புடன் இருக்குமாறும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராய் இருக்குமாறும் சிங்கப்பூர் உணவு அமைப்பு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மீன் பண்ணைகளைக் கேட்டுக்கொண்டுள்ளது என்று தேசிய சுற்றப்புற வாரியம் சொன்னது. இயல்புக்கு மாறான நிலவரம் தென்பட்டால் அதுபற்றி உடனடியாக சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் தெரியப்படுத்துமாறும் மீன் பண்ணைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
தேசிய சுற்றுப்புற வாரியம், மலேசியாவின் சுற்றுப்புறப் பிரிவு ஆகியவை இதர சில அமைப்புகளுடன் சேர்ந்து துவாஸ் இரண்டாம் இணைப்பில் ரசாயனக் கசிவுப் பயிற்சியை நடத்தின. அதற்கு மறுநாள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.