அலெக்சாண்டிரா சாலையில் உள்ள ‘இக்கியா’ கடையின் கார் நிறுத்தும் இடத்தில் நாய் ஒன்று வாகனத்தின் கதவுகளில் கட்டப்பட்டு இருந்த சம்பவத்தை விலங்குநல மருத்துவச் சேவை விசாரிக்கிறது.
இச்சம்பவம் மே 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அதில் நாய் ஒரு சிறிய கயிற்றால் வாகனத்துடன் கட்டப்பட்டிருந்தது. நாய் சிரமப்பட்டு நிற்பது போலும் தரையில் அமர்ந்திருப்பது போலும் படங்களில் இருந்தன.
தேசிய பூங்காவிற்கு இது குறித்து தகவல் கிடைத்தாகவும் தற்போது அது குறித்து விசாரித்து வருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விலங்குநல மருத்துவச் சேவை கூறியது.
இந்நிலையில் நாய் கட்டப்பட்டிருந்ததை பிற்பகல் 1:30 மணி வாக்கில் தாம் பார்த்ததாக அவ்வழியாக சென்ற நபர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
நாய் குரைத்து தமது கவனத்தை ஈர்த்ததாகக் கூறினார். கயிறு சிறியதாக இருந்ததால் அதனால் வசதியாக உட்காரவோ நிற்கவோ முடியவில்லை என்றார் அவர்.
சிறது நேரம் காத்திருந்தேன் ஆனால் வாகன உரிமையாளர் வராததால் இக்கியாவிடம் தகவல் கொடுத்ததாக அவர் கூறினார்.
வாடிக்கையாளர்கள் தங்களது செல்லப்பிராணிகளைத் கவனிப்பு இல்லாமல் வாகனங்களில் விட்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.