இவ்வாண்டுக்கான தலைசிறந்த இளம் கல்வியாளர் விருதை வென்ற அறுவரில் சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளியின் நற்பண்பு, குடியுரிமைக் கல்வி துறைத்தலைவரான ரிஷ்விண்டர் சிங்கும் ஒருவர்.
இயற்பியல் பாடமும் கற்பிக்கும் அவர், மாணவர்களின் அறிவியல் திறன், திட்ட மேலாண்மை, பேசும் திறன் ஆகியவற்றை வளர்க்க ஆளில்லா வானுர்தியை அடிப்படையாகக் கொண்ட போட்டி ஒன்றை சக ஆசிரியர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தார்.
மேலும், சுற்றுச்சூழல்மீது அறிவியல் ஏற்படுத்தும் நெறிமுறைத் தாக்கங்களை மாணவர்கள் எவ்வாறு கண்டறியலாம் என்பதைப் பல்வேறு புத்தாக்க அட்டைகள்வழி அவர் கற்பித்து வருகிறார்.
புதன்கிழமை (ஜூலை 1) தேசியக் கல்விக் கழகத்தில் நடந்த ஆசிரியர் பதவியேற்பு விழாவில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
மாணவர் முன்னேற்றத்திற்காக அயராத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி சிறந்த பங்களிப்புகளைக் கொண்டுள்ள ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 35 வயதிற்குக் கீழுள்ள ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் கற்பித்தல் வேட்கை, உத்வேகம், புத்தாக்கம், மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் அவர்கள் கொள்ளும் ஈடுபாடு ஆகியவற்றை அங்கீகரிக்கும் இவ்விருது 1999ல் அறிமுகம் கண்டது.
இவ்வாண்டு 230 பள்ளிகளைச் சேர்ந்த 1,426 ஆசிரியர்களுக்காக பள்ளிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் மொத்தம் 2,965 பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன.
கல்வி அமைச்சு, தேசியக் கல்விக் கழகம், தேசிய இளையர் மன்றம், காம்பஸ் ஆகிய வெவ்வேறு பங்குதாரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட தேர்வுக்குழு, 11 இறுதிப் போட்டியாளர்களிலிருந்து விருதுக்குரியவர்களைத் தேர்வுசெய்தது.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வுபெற்றவர்களில் ஒருவரான உட்குரோவ் உயர்நிலைப் பள்ளியின் சமூகக் கல்வித் துறைத்தலைவர் ஆயிஷா தஸ்னீம், மானுடவியல் பாடங்களின் முக்கிய நோக்கம் மனிதநேயத்தைக் கற்பதே என்று நம்புகிறார்.
மாணவர்களுக்குச் சமூகக் கல்விப் பாடத்தைச் சுவாரசியமானதாக மாற்ற அவர் இரண்டு பலகை விளையாட்டுகளை உருவாக்கினார்.
சமூகக் கல்வி என்பது சிங்கப்பூர் வரலாற்றைப் பற்றி மட்டுமே இருப்பதால் அது சுவாரசியமற்றது என்ற தவறான கருத்து மாணவர்களிடையே நிலவுவதைக் கவனித்த அவர், புதிய முயற்சியைக் கையிலெடுத்தார்.
இதன்மூலம், தங்களைச் சுற்றியிருக்கும் உலகம் குறித்த ஆழமான புரிதலை மாணவர்கள் பெறுவது திருவாட்டி ஆயிஷாவிற்கு நெகிழ்ச்சியளிக்கிறது.
விருதுவென்ற ஆறு ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் ஆதரவுடன் வெளிநாட்டுக் கற்றல் பயணம் ஒன்றுக்குச் சென்று வந்து பிற ஆசிரியர்களுடன் தங்கள் அனுபவத்தைப் பகிர்வர்.
இறுதிச்சுற்றுக்குத் தேர்வான ஐந்து ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு, உள்நாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவற்றில் பங்கெடுக்க $1,000 மானியம் வழங்கப்படும்.

