சிங்கப்பூர்க் கலைத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்குப் பங்களித்ததற்காக புரவலர்கள் 515 பேர் இவ்வாண்டின் கலைப் புரவலர்களுக்கான விருது விழாவில் புதன்கிழமை (20 ஆகஸ்ட்) அங்கீகரிக்கப்பட்டனர்.
அதில், 412 தனிமனிதர்களும் 103 நிறுவனங்களும் கலை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு அளித்த ஆதரவுக்காகச் சிறப்பிக்கப்பட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
புரவலர்களின் மொத்தப் பங்களிப்பு $45 மில்லியனைக் கடந்துள்ளது. தனிமனிதப் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை 2021ல் 196ஆக இருந்தது. அது இருமடங்குக்குமேல் உயர்ந்து, தற்போது மொத்த விருது பெற்றவர்களில் 80 விழுக்காட்டினை வகிக்கிறது.
மொத்த நன்கொடைகளில் 68 விழுக்காடு ($30 மில்லியனுக்குமேல்) நிறுவனங்களிடமிருந்தும், 32 விழுக்காடு ($15 மில்லியனுக்குமேல்) தனிமனிதர்களிடமிருந்தும் வந்துள்ளது.
பான் பசிபிக் ஹோட்டலில் நடைபெற்ற இவ்விருது விழாவில் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“கலைகள் நமது சிங்கப்பூர் உணர்வை வடிவமைக்கின்றன. உள்ளூர்க் கலைக் குழுக்கள் தொடர்ந்து வளர்ச்சிகண்டு, பலரின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளன. அரசாங்கமும் கலைகளில் முதலீடு செய்வதில் உறுதியுடன் இருக்கிறது,” என்று தமது உரையில் அமைச்சர் நியோ கூறினார்.
கடந்த அறுபது ஆண்டுகளில் கலைஞர்களும் கலைக் குழுக்களும் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் முக்கியப் பங்களிப்புகளை ஆற்றியுள்ளதாகக் கூறிய அவர், தாராள மனப்பான்மையுடன் எப்போதும் துணைநின்ற புரவலர்களின் ஆதரவின்றி அது சாத்தியமாகியிராது என்று குறிப்பிட்டார்
“உங்கள் தொடர்ச்சியான ஒத்துழைப்புடனும் அரசாங்கத்தின் ஆதரவுடனும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் பெருமைப்படக்கூடிய, தனித்துவமும் துடிப்பும் மிக்க கலைத்துறையை நாம் உருவாக்க முடியும்,” என்றார் அமைச்சர் நியோ.
தொடர்புடைய செய்திகள்
விருது பெற்றவர்களில் ஒருவரான நாவலாசிரியரும் கலாசாரப் பதக்கம் பெற்றவருமான 83 வயது முனைவர் மீரா சந்த், 2024 சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக ‘கலைகளின் தோழன்’ தனிநபர் விருதைப் பெற்றார்.
இந்தியத் தந்தைக்கும் சுவிஸ் தாய்க்கும் லண்டனில் பிறந்த முனைவர் மீரா, பல ஆண்டுகள் ஜப்பானில் வசித்தபோது, அங்குள்ள தனிமையான சூழலில் தமது எழுத்துப்பயணத்தைத் தொடங்கினார்.
வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, தமது நூல்கள் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டதால் இலக்கியச் சமூகத்துடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு குறைவாக இருந்ததாக அவர் கூறினார்.
அந்தக் காலத்தை நினைவுகூர்ந்த அவர், “வெளிநாட்டு விழாக்கள் எனக்குத் தேவையான ஊக்கத்தை அளித்தன. மற்ற எழுத்தாளர்களின் உரைகளைக் கேட்பதும் அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதும் எனது எழுத்துப் பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் இளம் எழுத்தாளர்களுக்கு அதே வாய்ப்பை வழங்கும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை நான் வலுவாக ஆதரிக்கிறேன்,” என்றார்.
1997ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்ததிலிருந்து, முனைவர் மீரா இங்குள்ள இலக்கியக் கலைகளை உறுதியாக ஆதரித்து வருகிறார். தமக்கான விருதை, தனிப்பட்ட பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாக மட்டுமல்லாமல், சிங்கப்பூரின் வளர்ந்துவரும் கலாசாரப் பயணத்திற்கான அங்கீகாரமாகவும் அவர் கருதுகிறார்.
“கலைகளே சிங்கப்பூரின் ஆன்மா. அவற்றைத் தொடர்ந்து ஆதரிப்பது, நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
‘கலைகளின் தோழன்’ தனிநபர் விருதைப் பெற்ற மற்றொரு புரவலர் ராதாகிருஷ்ணன் விஜந்திரன். அவர் சிங்கப்பூர் சிம்போனியா நிறுவனத்திற்கு 2024ல் பண நன்கொடைவழி அளித்த ஆதரவுக்காகச் சிறப்பிக்கப்பட்டார்.
மேலும், கலைகளுக்கான ஆதரவை விரிவுபடுத்தவும் கூடுதல் பங்கேற்பை ஊக்குவிக்கவும், தேசியக் கலை மன்றம் தரவு நுண்ணறிவு, சிந்தனைத் தலைமைத்துவத் திட்டங்கள், இலக்குத் திறன் மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவற்றுக்காகப் புதிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.