இளையர்களுக்கு விருதுகளும் மன உளைச்சலைக் கையாளும் கையேடும்

2 mins read
40940f4d-5f1b-4b67-8307-3d44d54e3dd9
அல் சுகூன்’ (Al Sukoon) கையேட்டை வெளியிட்ட திரு தினேஷ் வாசு தாஸ். - படம்: ஐ.எம்.யூத் அமைப்பு

சிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் இளையர்களிடம் சமூக சேவை, தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஐ.எம்.யூத் எனும் அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாகத் தொண்டூழியத்தில் ஈடுபட்டுள்ள இளையர்களுக்கு அண்மையில் விருது வழங்கிச் சிறப்பித்தது.

சுல்தான் பள்ளிவாசல் அரங்கில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற விழாவில், நவீன மனநலக் கோட்பாடுகளை இஸ்லாமிய விழுமியங்களுடன் இணைக்கும் ‘அல் சுகூன்’ (Al Sukoon) கையேடும் அறிமுகமானது. 

மன உளைச்சலைக் கண்டறியவும் ஆதரவு வழங்கவும் இளையர்களுக்கு அந்தக் கையேடு வழிகாட்டுகிறது.

நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த மக்கள்.
நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த மக்கள். - படம்: ஐ. எம்.யூத் அமைப்பு

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ், “இந்திய முஸ்லிம் சமூகம், பல்வேறு குழுக்களை ஒன்றிணைத்து மிகவும் இணக்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம், ஒருங்கிணைந்த செயல்பாடு சாத்தியம் என்பதை உலகிற்குச் செயல்வழி காட்டி வருகிறது,” என்றார்.

ஐ.எம்.யூத் அமைப்பு தனது உருமாற்றப் பணிகளின் மூலம், குறிப்பாக ‘அல் சுகூன்’ (Al Sukoon) கையேடு சமூகப் பராமரிப்பில் புத்துணர்ச்சியான அணுகுமுறையை வழங்குகிறது. இஸ்லாமியக் கோட்பாடுகளை நவீன மனநலக் கருத்துகளுடன் தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த முயற்சி இரு வெவ்வேறு துறைகளை இணைத்து, நல்வாழ்விற்கான ஒரு வலுவான, முழுமையான அடித்தளத்தை உருவாக்குகிறது என்று கூறினார் திரு தினே‌ஷ் வாசு தாஸ்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் அமைப்பு கண்டுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கது,” என்றார் அமைப்பின் முன்னாள் தலைவரும் நிறுவனருமான முஹம்மது ஆஷிக், 29.

“அமைப்பில் கிட்டத்தட்ட 400 இளைய உறுப்பினர்கள் உள்ளனர். ஏதேனும் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குக் கூடுதல் தொண்டூழியர்கள் தேவைப்படும்போது, நாங்கள் இந்த வலையமைப்பைப் பயன்படுத்திக்கொள்வோம்,” என்றார் அவர்.

விருது பெற்ற பஹியா சலாவுதீன்,18.
விருது பெற்ற பஹியா சலாவுதீன்,18. - படம்: ஐ. எம்.யூத் அமைப்பு

‘அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்’ விருது பெற்றார் அமைப்பில் ஓராண்டாகச் செயல்படும் பஹியா சலாவுதீன்,18.

“ஐ.எம்.யூத் அமைப்பில் எனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தலைமைத்துவப் பொறுப்பு மிகுந்த உத்வேகத்தை அளிக்கின்றன,” என்றார் அவர். 

தமது தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வளர்ச்சியை கல்வி, குடும்பக் கடமைகளுடன் சமநிலைப்படுத்தி, முழுத் திறனையும் வெளிப்படுத்த உறுதியாக இருப்பதாக பஹியா கூறினார். 

ஐ.எம். யூத் அமைப்பின் தொண்டூழியத்தில் ஈடுபட்டுவந்த சகோதரர்கள் தங்கள் கருந்துகளைப் பகிர்ந்தனர்.

விருது பெற்ற சகோதரர்கள்,  முஹம்மது ரிஃபாய், 23, முஹம்மது அஷ்ராஃப், 26.
விருது பெற்ற சகோதரர்கள்,  முஹம்மது ரிஃபாய், 23, முஹம்மது அஷ்ராஃப், 26. - படம்: ஐ. எம்.யூத் அமைப்பு

அமைப்பு தொடங்கிய ஆண்டிலிருந்து தொண்டூழியத்தில் ஈடுபட்டு வந்த முஹம்மது ரிஃபாய், 23 நீண்டகாலச் சேவை விருதையும் நிர்வாகக் குழு விருதையும் பெற்றார். 

“வெளிநாட்டு ஊழியர்களுடன் நோன்பு துறப்பது, மனநல முயற்சிகள் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடும்போது மற்றவர்களிடம் நாம் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தினால் அவர்கள் நன்மை அடைகின்றனர். குறிப்பாக, இந்திய முஸ்லிம் இளையர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க முயல்கிறேன்,” என்று முஹம்மது ரிஃபாய் என்று கூறினார். 

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2,300 வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்து நோன்பு துறக்கும் நிகழ்வின் திட்டத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார் முஹம்மது அஷ்ராஃப், 26. 

அந்தத் திட்டத்தின்கீழ் ஐவரை வழிநடத்தியதற்காக அவருக்கு தலைசிறந்த தலைவர் விருது கிடைத்துள்ளது.

“என்னுடன் பயணித்த இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி, அவர்களை ஊக்கப்படுத்த இந்த விருது ஊக்குவிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார். 

குறிப்புச் சொற்கள்