தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றங்களைத் தடுத்து பாதுகாப்பை உறுதிசெய்த நிறுவனங்களுக்கு விருது

4 mins read
d87a85ec-eafa-4c40-b4b3-dd93fd7268f5
தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் தலைவர் ஜெரால்ட் சிங்கத்துடன் (வலமிருந்து இரண்டாவது) குற்றத்தடுப்புக்கான முதன்மை விருதினைப் பெற்ற யுஓபி நிறுவனத்தைச் சேர்ந்தோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது வங்கி வாடிக்கையாளர்கள் பலரை மோசடி வலையில் சிக்காமல் காப்பாற்றிய யூஓபி நிறுவனம் இவ்வாண்டுக்கான குற்றத் தடுப்பு விருதினைப் பெற்றுள்ளது.

700,000 வெள்ளி மதிப்பிலான 5 கிலோ தங்கத்தை வாங்கி, அதனை மோசடிப் பேர்வழிகளிடம் கொடுக்கவிருந்த மூத்தோரைத் தடுத்தார் யூஓபி வங்கி முதன்மைக் கிளையின் சேவை மேலாளர் அஸ்லினா அமின்.

தொடர்ந்து கைப்பேசியைப் பார்த்தபடி, யாருக்கோ குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருப்பது, தாம் வங்கிக்கு வந்துள்ளதைப் படமெடுத்து யாருக்கோ அனுப்புவது எனப் பதற்றத்துடன் காணப்பட்ட வாடிக்கையாளரைப் பார்த்த அஸ்லினா, அவர் ஏதோ சிக்கலில் இருப்பதாக உணர்ந்தார்.

அவரை அணுகி, அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறி, யாருக்கு அனுப்புகிறார், எதற்காக வங்கிக்கு வந்துள்ளாரெனத் தெரிந்துகொள்ளத் தொடங்கினார் அஸ்லினா.

ஒரு முதலீட்டு வாய்ப்புக்காக 5 கிலோ தங்கம் வாங்க வேண்டும் என்றும் தம்மை அணுகியது நாணய ஆணைய அதிகாரி என்றும் வாடிக்கையாளர் கூற, அவர் மோசடிக்கு ஆட்பட்டுள்ளதை அஸ்லினா உணர்ந்தார்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் செலவிட்டு, சிங்கப்பூர் நாணய ஆணையம் தனிப்பட்ட அளவில் எவரையும் அணுகுவதில்லையெனக் கூறி, இது மோசடி என்று அவருக்குப் புரிய வைத்தார் அஸ்லினா. தொடர்ந்து, அவரது வங்கிக் கணக்கை முடக்கியதுடன், பிற வங்கித் தகவல்களை மோசடிப் பேர்வழியிடம் கொடுத்திருந்தால் அவற்றையும் உடனடியாக முடக்குமாறும் அஸ்லினா அறிவுறுத்தினார்.

முதலில் இதனை நம்ப மறுத்த வாடிக்கையாளர், சற்று நேரத்துக்குப் பிறகே தாம் காப்பாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் அவர் சொன்னார்.

இதேபோல, தியோங் பாரு கிளையில், தாம் சேமித்த 15,000 வெள்ளிக்கும் மேலான வைப்புத்தொகையை இழக்கவிருந்த பெண்ணை மோசடியிலிருந்து காப்பாற்றினார் துணைக் கிளை மேலாளர் ஜெசிக்கா லீ.

முதலில் அதிக வட்டிக்காக வேறு வங்கிக்கு மாற்றப்போவதாகக் கூறி, நிறைவடையாத வைப்புத்தொகையைப் பணமாக வெளியில் எடுக்கக் கோரினார் அந்த வாடிக்கையாளர்.

அவரிடம் தெரிந்த அவசரம் ஜெசிக்காவிற்கு சந்தேகத்தை எழுப்பவே மேற்கொண்டு கேள்விகள் கேட்கத் தொடங்கினார். பதில்களில் தெளிவின்மை அவரது சந்தேகத்தை வலுப்படுத்தவே, உடனடியாக வங்கியின் மோசடிக் கண்டுபிடிப்புக் குழுவை அணுகினார்.

அவர்கள் இதனைச் சோதிக்கும் வேளையில், வாடிக்கையாளரிடம் பணத்தை எடுப்பது பாதுகாப்பானதன்று என அறிவுறுத்தி, காசோலையாகக் கொடுத்தார் ஜெசிக்கா.

வேறு வழியின்றி அதனை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர், மறுநாள் மீண்டும் வந்து ரொக்கமாக வேண்டும் என வலியுறுத்தினார். மீண்டும் அதுகுறித்த கேள்விகள் கேட்கப்பட, சிரமத்திலிருக்கும் தம் சகோதரருக்கு உதவ வேண்டும் எனக் கூறினார்.

இருமுறையும் அவர் வெவ்வேறு காரணத்தைக் கூறியது சந்தேகத்தை வலுப்படுத்தியது. தொடர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்க, தமது பணத்தைக் கொடுப்பதில் என்ன சிரமம் எனக் கோபத்துடன் கேட்டார் வாடிக்கையாளர்.

பொறுமையிழக்காமல் அவரிடம் பேசிப் புரிய வைத்ததில், மோசடிப் பேர்வழிகள் அவரை அச்சமூட்டி பணமெடுக்கக் கூறியது தெரியவந்தது. உடனடியாகக் காசோலையை முடக்கி அவரது வாழ்நாள் சேமிப்பு பறிபோகாமல் காத்தார் ஜெசிக்கா.

“வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு முதன்மையானது. சிறு அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாகச் செயல்பட்டுப் பாதுகாப்பது எங்கள் கடமை. அவர்கள் சிரமப்பட்டு ஈட்டிய பணத்தை இழக்காமல் காத்ததில் மகிழ்ச்சி,” என்று இரு ஊழியர்களும் தெரிவித்தனர்.

குற்றத் தடுப்பு விருதுகள்

மோசடிச் சம்பவங்களைத் தடுத்து, சமூகத்தில் பாதுகாப்பை உறுதிசெய்த பத்து நிறுவனங்களுக்குத் தேசிய குற்றத் தடுப்பு மன்றம் சார்பில் குற்றத் தடுப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

அக்டோபர் 7ஆம் தேதியன்று மேரியட் டாங் பிளாசா ஹோட்டலில் (Marriott Tang Plaza Hotel) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துறைகளின் துணை அமைச்சர் கோ பெய் மிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

குற்றச் செயல்களைத் தடுத்து சிங்கப்பூர்ச் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க மன்றத்துடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வகையில், குற்றத் தடுப்பில் சிறந்த தலைமைத்துவத்தை உறுதிசெய்த நான்கு நிறுவனங்களுக்கு ‘வெற்றியாளர் விருது’ (Champion Award) வழங்கப்பட்டது. மரினா பே சேண்ட்ஸ், மெட்டா, ‘மோட்டரோலா சொல்யூ‌‌ஷன்ஸ்’, யூஓபி ஆகிய நான்கு நிறுவனங்களும் அவ்விருதினைப் பெற்றன.

சமூகப் பாதுகாப்பிற்குப் பங்களித்த ஆறு அமைப்புகளுக்குப் ‘பங்காளி விருது’ (Partner Award) வழங்கப்பட்டது. ‘கோர்ட்ஸ்’, ஓசிபிசி, ஷெங் சியோங், ‌‌‌ஷாப்பி, சிங்கப்பூர் பூல்ஸ், டிக்டாக் ஆகிய ஆறு நிறுவனங்களும் அவ்விருதினைப் பெற்றன.

“கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனங்கள், அமைப்புகள், தனிமனிதர்களை இணைத்து குற்றங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க தேசிய குற்றத் தடுப்பு மன்றம் உழைத்து வருகிறது. தற்போது இணைய மோசடி உள்ளிட்ட பலவற்றுக்கும் எதிராகச் செயலாற்ற பல நிறுவனங்கள் முன்வருவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் துணையமைச்சர் கோ.

“தேசிய குற்றத் தடுப்பு மன்றம் லாப நோக்கற்ற அமைப்பு. பலவகைக் குற்றங்களைத் தடுக்க வெவ்வேறு முன்னெடுப்புகளை அது மேற்கொண்டு வருகிறது,” என்று கூறிய அமைப்பின் தலைவர் ஜெரால்ட் சிங்கம், அதன் இளையர் பிரிவு, செயலி உள்ளிட்ட அண்மை முன்னெடுப்புகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் காவல்துறையைச் சேர்ந்தோர், தேசிய குற்றத் தடுப்பு மன்ற உறுப்பினர்கள், பங்காளி அமைப்பினர், தொண்டூழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்