தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பங்கு வகித்தவர்களுக்கு விருதுகள்

4 mins read
42b9912e-39ef-45da-800a-0502da5d4ab4
நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கு ஆற்றிய பங்களிப்புக்காக, மொத்தம் 183 தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற உள்துறைக் குழு தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணை அமைச்சருமான ஃபை‌ஷால் இப்ராஹிம், உள்துறை, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங் முதலியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உள்துறை அமைச்சின் அரசியல் அதிகாரிகள் ஐவரும்  உள்துறைக் குழு தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உள்துறை அமைச்சின் அரசியல் அதிகாரிகள் ஐவரும் உள்துறைக் குழு தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: சாவ்பாவ்

“கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் பொருளியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் தொடர்ச்சியான வளர்ச்சி கண்டுள்ளது,” எனத் தெரிவித்த அமைச்சர் சண்முகம், “இந்த வளர்ச்சியின் அடிப்படைக் காரணங்கள் நிலைத்தன்மையும் பாதுகாப்பும்,” என்று குறிப்பிட்டார்.

இந்தச் சாதனை, பல்லாண்டுகளாக நீடிக்கும் முறையான ஆட்சியாலும் நல்லறம் சார்ந்த அரசியல் கொள்கைகளாலும் உருவானதாகவும் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையே இதற்கு தூணாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

2024ல் உள்துறை அமைச்சு நடத்திய கருத்துக்கணிப்பில், சிங்கப்பூரில் 90 விழுக்காட்டினர் உள்துறைக் குழு மீது நம்பிக்கை வைத்திருப்பது கண்டறியப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“நம்பிக்கையும் நல்ல செயல்திறனும் ஒன்றை ஒன்று ஊக்குவிக்கும் சுழற்சியாகச் செயல்படுகின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களிடையே நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக, நேர்மையான செயல்பாடு, தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு திருத்தும் மனப்பாங்கு, தொடர்ச்சியான மேம்பாடு, புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் உள்துறைக் குழு அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.

மொத்தம் ஐந்து பிரிவுகளில் அதிகாரிகள், தன்னார்வலர்கள், கூட்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு உள்துறை அமைச்சரின் தேசிய தின விருதுகள் வழங்கப்பட்டன.

உயிர்களைக் காப்பாற்றிய அல்லது குற்றத்தைத் தடுத்த பொதுமக்கள் 38 பேருக்கு உள்துறை அமைச்சரின் பொது உதவி விருது வழங்கப்பட்டது.

முக்கியப் பாதுகாப்புப் பணிகளுக்கு ஆதரவளித்த அல்லது ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றிய தன்னார்வலர்கள் 19 பேருக்கு உள்துறைக் குழு தன்னார்வலர் விருது கிடைத்தது.

உள்துறைக் குழுவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திய 11 நிறுவனங்களுக்கும் தனிநபர்கள் ஐவருக்கும் உள்துறைக் குழு பங்குதாரர்கள் விருதுகள் வழங்கப்பட்டன.

‘மஞ்சள் நாடா திட்டம் - 20 ஆண்டுகளாக இரண்டாவது வாய்ப்புகள்’, ‘போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினம் 2024’ உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்குக் குழு விருதுகளும் வழங்கப்பட்டன.

தங்கள் துறைகளில் சிறந்த செயல்திறனையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திய உள்துறைக் குழு அதிகாரிகள் 105 பேர் தனிப்பட்ட விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

தனிப்பட்ட விருதைப் பெற்றவர்களில் ஒருவரான கிளமெண்டி காவல்துறைப் பிரிவின் பொது புலனாய்வுக் குழுத் துணைத்தலைவரும், நிலைய ஆய்வாளருமான ஆரன் ராஜ், கடந்த 19 ஆண்டுகளாகச் சிங்கப்பூர்க் காவல்துறையில் சேவையாற்றி வருகிறார்.

நிலைய ஆய்வாளரான (Station Inspector) ஆரன் ராஜுவுக்கு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் விருது வழங்குகிறார்.
நிலைய ஆய்வாளரான (Station Inspector) ஆரன் ராஜுவுக்கு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் விருது வழங்குகிறார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

$280,000 மதிப்புள்ள நிறுவன நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்ட குற்றவியல் மோசடி வழக்கு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வாளருடன் தொடர்புடைய ஒரு தொந்தரவு வழக்கு உள்ளிட்ட முக்கிய புலனாய்வுகளில் திரு ஆரன் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

“மக்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை நேரில் காணும்போது அது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும்,” என்று அவர் கூறினார்.

திரு ஆரனின் தலைமைத்துவம் அவரது குழுவிற்கு வழிகாட்டுதல் வழங்குவதையும் அதிகாரம் அளிப்பதையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

“ஒவ்வொரு புலனாய்வாளரும் தங்களது தனிப்பட்ட பலத்தை அணிக்குக் கொண்டு வருகிறார்கள். அவற்றை மேம்படுத்தி, எங்கள் பணியின் சிக்கலான சூழ்நிலைகளில் அவர்களை வழிநடத்த நான் உதவி வருகிறேன்,” என்றார் அவர்.

இந்த விருதைத் தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக திரு ஆரன் கருதுகிறார். “இது என் குழுவின் தொடர்ச்சியான ஆதரவையும் எனது வழிகாட்டிகளின் உறுதுணையையும் பிரதிபலிக்கிறது. இது ஒரு தனிப்பட்ட அங்கீகாரம் மட்டுமன்று, சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான எங்கள் கூட்டு முயற்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்,” என்றார் அவர்.

தனிப்பட்ட விருதைப் பெற்ற மற்றொருவரான 33 வயது பிரேமலா மாரியப்பன், 2017ஆம் ஆண்டு சிங்கப்பூர்ச் சிறைத்துறையில் பணியாற்றத் தொடங்கி, தற்போது சமூகத் சீர்திருத்தத் துறை (இடைநிலை மறுவாழ்வு இல்லம்/வீட்டுக் காவல்) இரண்டாம் குழுவின் மேலாளராகச் செயல்படுகிறார்.

சமூகத் திருத்தத் துறை இரண்டாம் குழுவின் மேலாளரான பிரேமலா மாரியப்பனுக்கு துணை அமைச்சர் கோ பெய் மிங் விருது வழங்குகிறார்.
சமூகத் திருத்தத் துறை இரண்டாம் குழுவின் மேலாளரான பிரேமலா மாரியப்பனுக்கு துணை அமைச்சர் கோ பெய் மிங் விருது வழங்குகிறார். - படம்: சிங்கப்பூர் சிறைத்துறை

பெண் கைதிகளின் தனித்துவமான சவால்களை உணர்ந்த செல்வி பிரேமலா, அவர்களுக்கான பாலின-உணர்திறன் (Gender-Responsive) அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்களை உருவாக்கியுள்ளார். இக்கைதிகள் பெரும்பாலும் மன அழுத்தம், மனநலப் பிரச்சினைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

“மக்களின் வாழ்க்கைச் சம்பவங்களை, குறிப்பாக அவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான திருப்பங்களைப் புரிந்துகொள்வதில் எனக்கு எப்போதும் ஆழ்ந்த விருப்பம் உண்டு,” என்று செல்வி பிரேமலா கூறினார்.

சிறைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் பணி அனுபவங்களைப் பரிசீலிக்க உதவும் வகையில் அவர் ஒரு சுய பிரதிபலிப்பு சஞ்சிகையை உருவாக்கும் பணிகளுக்குத் தலைமை வகித்தார்.

“சிக்கலான பின்னணிகளைக் கொண்ட கைதிகள், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை என்னிடம் மனம் திறந்து பகிர்ந்துகொள்கின்ற தருணங்களும் அவர்கள் சமூகத்தில் மீண்டும் வெற்றிகரமாக இணையும் தருணங்களும் எனக்கு ஆழ்ந்த மனத்திருப்தியை அளிக்கின்றன,” என்று அவர் கூறினார்.

தான் மேற்கொண்ட இந்தப் பாதை சரியானது என்பதை இந்த விருது மேலும் உறுதிப்படுத்துவதாக செல்வி பிரேமலா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்