சிங்கப்பூர்ப் பொதுப் போக்குவரத்தின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகிய அம்சங்களைக் காக்க போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்குப் பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு விருதுகள் வழங்கி நிலப் போக்குவரத்து ஆணையம் சிறப்பிக்கிறது.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) நடந்த அவ்விருது வழங்கும் விழாவில் 450 போக்குவரத்து ஊழியர்களுக்குப் பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது.
பேருந்துச் சேவை எண் 168ன் ஓட்டுநர் லீ சீ சோங், தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கு இட்டுச் செல்லும் இணைப்புச் சாலையில் பள்ளி மாணவர் ஒருவர் புத்தகப் பையுடன் நடந்துசெல்வதைக் கண்டார்.
53 வயதான லீ, 10 ஆண்டுகளாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.
போக்குவரத்துச் சந்திப்பில் வாகனங்களுக்கான சிவப்பு விளக்கு எரிந்தபோது பேருந்தை நிறுத்திவிட்டு, அந்த மாணவனை நோக்கி விரைந்தார் திரு லீ.
அச்சிறுவனை மீட்டுப் பாதுகாப்பாகத் தாம் ஓட்டிவந்த பேருந்தில் ஏற்றினார் அவர்.
மூன்று ஆண் பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், அச்சிறுவனின் பாதுகாப்பை எண்ணி வருந்தினார்.
தொடர்புடைய செய்திகள்
தாம் பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டதால், செங்காங்கில் இருக்கும் தொடக்கப் பள்ளிக்கு அவ்வழியாக நடந்துசென்றதாக அச்சிறுவன் கூறினான்.
பிடோக் பேருந்து முனையத்திற்கு அந்த மாணவரை அவர் அழைத்துச்சென்றார்.
அந்த மாணவனின் பள்ளி ஆசிரியர் வரும்வரை அங்கேயே காத்திருந்து அவரை ஆசிரியரிடம் ஒப்படைத்த பின்னரே பணிக்குத் திரும்பினார் ஓட்டுநர் லீ.
பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டாகும் வகையில் நடக்கவிருந்த சம்பவங்களைத் தவிர்த்த 58 ஊழியர்களுக்குச் சிறப்புப் பாராட்டு விருது வழங்கப்பட்டது.
எஸ்எம்ஆர்டி நிறுவன பெருவிரைவு ரயில் சேவையில் பணியாற்றிவரும் திரு கார்த்திகேசன் நாகையா, திரு நோர் எல்லி புத்ரா அப்துல்லா, திரு பால்ரின் சிங், திரு முகம்மது அஸ்ரஃப் முகம்மது ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
காமன்வெல்த் பெருவிரைவு ரயில் நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் பெண் ஒருவரையும் அவருடைய மகளையும் ஆடவர் ஒருவர் தாக்க முயன்றார்.
அச்சம்பவத்தைக் கண்ட திருகார்த்திகேசன் விரைந்து செயல்பட்டு அந்த ஆடவரை மடக்கிப் பிடித்து ரயில் நிலையம் அழைத்து வந்தார்.
திரு சிங், அதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
23 வயது புத்ராவும் 46 வயது அஸ்ரஃப்பும் பாதிக்கப்பட்ட தாய், மகளை அமைதிப்படுத்தினர்.
பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய கருவிகளை உருவாக்கியவர்களுக்கு ‘ஸ்டாட்’ விருதுகள் வழங்கப்பட்டன.

