‘அவேர்’ எனப்படும் மாதர் செயலாய்வுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் கொரினா லிம் இவ்வாண்டு இறுதியுடன் அப்பதவியிலிருந்து விலகுகிறார்.
லாப நோக்கமற்ற அமைப்பான அவேர், வியாழக்கிழமை (அக்டோபர் 30) தனது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக இதனைத் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து திருவாட்டி லிம் ஷூன் யின் அவ்வமைப்பின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்பார்.
திருவாட்டி கொரினாவின் பங்களிப்பிற்காக நன்றி தெரிவித்துள்ள அவேர், தனது வளர்ச்சியில் அவருக்குப் பெரும்பங்குண்டு எனக் குறிப்பிட்டுள்ளது.
“வேலையிடப் பாதுகாப்பு, தந்தைமை விடுப்பு, ஒற்றைத் தாய்மார்க்கு மேம்பட்ட வீடமைப்பு வசதி, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோர்க்கு சட்டப் பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்த திருவாட்டி கொரினா முன்னின்று வழிநடத்தியுள்ளார்,” என்று அவேர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
நியூயார்க்கிலுள்ள கொல்ம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான 60 வயது கொரினா, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்திலும் சட்டப் படிப்பும் பயின்றுள்ளார்.
கடந்த 1992 மார்ச்சில் அவேர் அமைப்பில் இணைந்த அவர், பின்னர் 2010ஆம் ஆண்டு அதன் முதலாவது நிர்வாக இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவருக்குப்பின் அப்பொறுப்பை ஏற்கவுள்ள திருவாட்டி லிம் ஷூன் யின், தற்போது ரசல் ரெனால்ட்ஸ் அசோசியேட்ஸ் எனும் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்துவருகிறார்.



