பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிங்கப்பூர் தேசிய பக்கவாதச் சங்கம் ஒன்பதாவது ஆண்டாக பெருநடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாண்டு அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்காகக் கிட்டத்தட்ட 800 பங்கேற்பாளர்களும் 257 தொண்டூழியர்களும் திரண்டனர்.
பக்கவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன் அதனால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பதற்காகவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அட்டிக்கா அகமது, செரீன் செங், கெல்வின் லியோங், மாயா சியா, டான் போ சூ ஆகிய பக்கவாத நோயாளிகள் $22,199 நிதி திரட்டி குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தனர்.
தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சுகாதார அமைச்சுத் தரவின்படி, சிங்கப்பூரில் பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் நேரும் மரணங்களுக்கு நான்காவது முக்கியக் காரணமாக பக்கவாதம் விளங்குகிறது.
இச்சூழலில், சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை, டான் டோக் சேங் மருத்துவமனை, செயின்ட் லியூக்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுடனான நட்புறவுத் திட்டத்தைச் சிங்கப்பூர் தேசிய பக்கவாதச் சங்கம் விரிவுபடுத்தியுள்ளது.
தொடக்கக் காலத்தில் பக்கவாதத்தை எதிர்கொள்வோருடன் முக்கியமான ஆதரவுச் சேவைகளை இணைக்கிறது இச்சங்கம். இத்தகைய முயற்சிகளின் மூலம், பக்கவாதத்திற்கு உள்ளானவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த சங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கூடிய விழிப்புணர்வு, முன்தடுப்பு மற்றும் நல்ல நிர்வாகத்தின்மூலம், பக்கவாத பாதிப்பைக் குறைக்க சங்கம் முற்படுவதாக அதன் தலைவர் ஷாமளா திலராஜா கூறினார்.
“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் பராமரிப்பிற்கான சூழலை வலுப்படுத்தி, அவர்களைத் துடிப்புடன் இயங்கச் செய்வதே எங்கள் நோக்கம்,” என்றார் இணைப் பேராசிரியர் ஷாமளா.
சங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்கான நன்கொடைகள் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆர்வமுள்ளோர் https://www.giving.sg/donate/campaign/sofs-2024 என்ற இணையத்தளத்தை நாடலாம்.