மின்னிலக்க நாணயத்தில் கட்டணம் செலுத்த ஏஎக்ஸ்எஸ் அனுமதி

1 mins read
03c33e50-073f-491e-a2cc-d7878e51ca8b
ஏஎக்ஸ்எஸ் மற்றும் மின்னிலக்க நாணயக் கட்டண நிறுவனமான டிரிப்பல்-ஏ இணைந்து இச்சேவையை வழங்குகின்றன. - படம்: டிரிப்பல்-ஏ, ஏஎக்ஸ்எஸ்

கட்டணங்கள், அபராதங்கள், வரிகள் போன்றவற்றை ‘ஏஎக்ஸ்எஸ்’ பயனாளர்கள் இனி மின்னிலக்க நாணயங்களின் மூலம் செலுத்த முடியும்.

கட்டணம் செலுத்தும் தளமான ஏஎக்ஸ்எஸ், ‘டிரிப்பல்-ஏ’ எனும் மின்னிலக்க நாணயக் கட்டண நிறுவனத்துடன் இணைந்து இதுகுறித்த அறிவிப்பை ஜனவரி 23ஆம் தேதியன்று வெளியிட்டது.

ஏஎக்ஸ்எஸ் வழங்கும் 600 சேவைகளில் 550 சேவைகள் தொடர்பில் மக்கள் நான்கு வகை மின்னிலக்க நாணயங்களில் கட்டணம் செலுத்தலாம் என்று அவை தெரிவித்தன.

அந்த நான்கு வகை நாணங்களில் ‘பிட்காய்ன்’ மின்னிலக்க நாணயமும் ஒன்று.

கடன் அட்டைகள், வங்கிக் கடன்கள் ஆகியவை தொடர்பான 50 ஏஎக்ஸ்எஸ் சேவைகளுக்கு இந்தக் கட்டணமுறை பொருந்தாது.

தற்போதைக்கு மின்னிலக்க நாணயங்கள் வழி கட்டணம் செலுத்தும் வசதி, ஏஎக்ஸ்எஸ் கைப்பேசிச் செயலியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

2024ன் இரண்டாம் காலாண்டில் தீவின் 650 ஏஎக்ஸ்எஸ் இயந்திரங்களிலும் ஏஎக்ஸ்எஸ் இணையத்தளத்திலும் இந்த அம்சத்தைச் சேர்க்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

ஏஎக்ஸ்எஸ் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது மாதம் 650,000 ஆக உள்ளது. மாதத்தில் குறைந்தது ஒரு கட்டணமாவது ஏஎக்ஸ்எஸ் மூலம் செலுத்தும் பயனாளர்களை இந்த எண்ணிக்கை குறிக்கும்.

ஏஎக்ஸ்எஸ் சேவைகளை நாடும் பலதரப்பட்ட பயனாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனம் இயங்குவதற்கு இந்த ஒத்துழைப்பு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்