குறைவான குழந்தைப் பிறப்பு விகிதத்தால் கூடுதலாக புதிய குடிமக்கள் தேவை: கான்

குறைவான குழந்தைப் பிறப்பு விகிதத்தால் கூடுதலாக புதிய குடிமக்கள் தேவை: கான்

3 mins read
33bad63e-1a5b-4451-9678-c3b04057101a
இந்த விவகாரம் குறித்து துணைப் பிரதமர் கான் கிம் யோங் அண்மையில் பேசியிருந்தார். - கோப்புப் படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் பெரிய அளவில் குறைந்து வருகிறது, மக்கள்தொகை வேகமாக மூப்படைகிறது. இத்தகைய சூழலில் வரும் ஆண்டுகளில் கூடுதலான வெளிநாட்டவர் இங்கு குடிவருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. தெளிவாக வரையப்பட்ட திட்டங்கள், சமூக அல்லது தனிநபர்கள் சார்ந்த முயற்சிகள் மூலம் புதிய குடிமக்களை சமூகத்துக்குள் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் ஆரம்பக்கட்ட ஒட்டுமொத்த கருவள விகிதம் வரலாறு காணாத அளவு குறைவாக, 2025ஆம் ஆண்டில் 0.87ஆகப் பதிவானது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அறிவித்திருந்தார். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2040களின் தொடக்கத்துக்குள் குடிமக்களின் எண்ணிக்கை சுருங்கத் தொடங்கலாம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

குடும்பத்தைத் தொடங்கும் சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கத் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆக அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, மிகவும் மோசமாக இருக்கும் பிறப்பு விகிதச் சரிவை ஈடுகட்ட கவனமான முறையில் வெளிநாட்டவர் சிங்கப்பூருக்குக் குடிவருவதைக் கையாள்வதற்கான திட்டத்தையும் திரு கான் வெளியிட்டார்.

சமுதாய அம்சங்களின் (demographics) போக்கைக் கருத்தில்கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளில் அரசாங்கம் 25,000லிருந்து 30,000 பேருக்குப் புதிய குடியுரிமைகளை வழங்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த எண்ணிக்கை, 2020லிருந்து 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்ட 21,300 புதிய குடியுரிமைகளைவிட 17லிருந்து 41 விழுக்காடு அதிகமாகும்.

அதோடு, நிரந்தரவாசிகளின் சராசரி எண்ணிக்கையும் 21 விழுக்காடு அதிகரிக்கவுள்ளது.

2020-2024 காலத்தில் ஆண்டுதோறும் சுமார் 33,000 பேருக்கு நிரந்தரவாச தகுதி வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40,000க்கு அதிகரிக்கப்படவுள்ளது.

ஒருவர் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தது ஈராண்டுகளுக்காவது நிரந்தரவாசியாக இருக்கவேண்டும்.

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் வெளிநாட்டவர் எண்ணிக்கை குறித்து வருத்தம் நிலவி வருகிறது. அதனால் 2011ஆம் ஆண்டு ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக) வரலாற்றில் முதன்முறையாக குழுத்தொகுதி ஒன்றில் தோல்வியடையவும் நேரிட்டது.

வேலைகள், அத்தியாவசிய அம்சங்களுக்கான உண்மையான போட்டி, உண்மையாக இருந்தாலும் சரி அத்தகைய யூகம் இருந்தாலும் சரி, தங்களை ‘இரண்டாம் தர’ குடிமக்களாக மாற்றிவிட்டது என்ற கருத்து இருந்ததாகக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூக ஆய்வகத் துணைத் தலைமை ஆய்வுக் கல்வியாளர் டான் எம் செர் கூறியுள்ளார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் எஸ். ராஜரத்தினம் அனைத்துல ஆய்வுக் கழகத்தின் சமூக ஒருங்கிணைப்பு ஆய்வுத் திட்டத்தின் தலைவரான டாக்டர் லியோங் சான்-ஹூங், “என்னதான் பன்முகக் கலாசாரமும் திறமைக்கு முன்னுரிமையும் சிங்கப்பூருக்கான அடையாளத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும், வெளிநாட்டவர் இங்கு குடியேறுவதால் ஏற்படும் சமூக மாற்றங்களைப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வர் என்று சொல்லிவிட முடியாது,” என்று விவரித்தார்.

சிங்கப்பூரில் குடியேறுவோரில் பெரும்பாலோர் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2024ல் இங்கு குடியேறுவோரில் 64.3 விழுக்காட்டினர் இவ்வட்டாரத்திலிருந்து வந்தவர்கள். 2014ல் இவ்விகிதம் 55.5 விழுக்காடாக இருந்தது. அதே காலகட்டத்தில் ஆசிய நாடுகளிலிருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை 38.5 விழுக்காட்டிலிருந்து 32.8 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

அண்மைக் காலமாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற சிலர், இனவாத பாரபட்சத்துக்குக்கூடத் தாங்கள் ஆளானதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, புதிதாக குடியேறுவோரும் சிங்கப்பூரின் சமூக வழக்கங்களையும் கலாசார நடைமுறைகளையும் புரிந்து நடந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்