குவீன்ஸ்டவுனின் ஸ்டர்லிங் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 11) அதிகாலை நேரத்தில் சாலையில் கிடந்த பை குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அந்தப் பையில் கம்பிகளுடன் இருந்த பொருள் இருந்தது.
பின்னிரவு 2.35 மணியளவில் பை குறித்து தகவல் கிடைத்ததாகச் சொன்ன அதிகாரிகள், “சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டன,” என்றும் “அந்தப் பொருள் தனிநபர் நடமாட்ட சாதனத்தின் மின்கலம் என்பது உறுதிசெய்யப்பட்டது,” என்றும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் சாலையின் நடுவில் ஒரு தேவாலயத்துக்கு வெளியே தனியாக ஒரு பை இருந்தைக் காண முடிகிறது. திறந்திருந்த அந்தப் பையிலிருந்து கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்தன.
அந்தக் காணொளியைப் பதிவேற்றியவர், “இது உண்மையில் பார்ப்பதற்கு வெடிகுண்டைப் போல இருக்கிறது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. சாதாரண பள்ளிப் பை போலத்தான் இருக்கிறது,” என்று கூறி பையை பல கோணங்களில் அசைத்து பார்த்தார்.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு வந்து பையைச் சுற்றி காவல்துறை கூடாரம் அமைத்ததைக் காணொளியில் காண முடிகிறது.
சிறிது நேரத்தில் பெய்த கனத்த மழையில் நீர் பெருகியதால் பை அதில் பாதி மூழ்கிய நிலையில் காணப்பட்டது.
சம்பவத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. யாரும் அங்கிருந்து வெளியேற்றப்படவும் இல்லை. அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.
காவல்துறை, பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தீவிரமாகக் கருதுகிறது என்றும் வேண்டுமென்றே பீதியைக் கிளப்புவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.