மோசடி வழக்கில் ‘கான் மம்’ மூதாட்டிக்குப் பிணை

2 mins read
93c139f0-80ad-4afb-ac65-1f1d5a110be0
‘கான் மம்’ என்ற நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் நடித்துள்ள டியோன் மேரி ஹான்னா. - யூடியூப் காணொளிப்படம்

மோசடிப் பேர்வழிகள் குறித்த நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பிரிட்டிஷ் பெண்ணுக்கு $50,000 தொகையில் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஏறக்குறைய $500,000 தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

டியோன் மேரி ஹான்னா, 84, என்ற அப்பெண் மத்தியக் காவல்துறைப் பிரிவுத் தலைமையகத்தில் இருந்தபடி வியாழக்கிழமை (ஏப்ரல் 17) காணொளி வழியாக நீதிமன்ற விசாரணையில் முன்னிலையானார்.

அவர்மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

“உங்களைப் பிணையில் எடுக்க யாரும் உள்ளனரா?” என்று ஹான்னாவிடம் மாவட்ட நீதிபதி கேட்டதற்கு, “யாரும் இல்லை,” என்று அவர் பதிலுரைத்தார்.

ஹான்னாவின் சார்பில் வாதாட எந்த வழக்கறிஞரும் முன்னிலையாகவில்லை. இவ்வழக்கில் வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் மே 16ஆம் தேதி இடம்பெறும்.

கடந்த மார்ச் 28ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட ஹான்னாமீது ஏப்ரல் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஐந்து மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றால் மூவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இம்மாதம் 11ஆம் தேதியும் ஹான்னா நீதிமன்றத்தில் முன்னிலையானார். அதற்கு முதல்நாள்தான் அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பினார்.

போலி முதலீட்டு வாய்ப்புகள், சொத்துரிமை பெற்றுத் தருவதாகக் கூறி, ஹான்னா தங்களை ஏமாற்றிவிட்டதாக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவர்மீது நடவடிக்கை எடுத்தனர்.

‘கான் மம்’ என்ற நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் ஹான்னா நடித்துள்ளார்.

தாம் பெற்ற மகனின் வாழ்வில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நுழைந்து, அவரிடமிருந்து அவர் 300,000 பவுண்டு (S$520,000) ஏமாற்றியதாக அந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்டது.

கடந்த மார்ச் 25ஆம் தேதி அப்படம் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, அவர்மீது சிங்கப்பூர்க் காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இவ்வாண்டு பிப்ரவரி 13ஆம் தேதிக்கும் மார்ச் 10ஆம் தேதிக்கும் இடையே, ஹான்னா சிங்கப்பூரிலும் பிரான்சிலும் இருந்தபோது மூன்று பேரை அவர் ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்