நகர்ப்புற பண்ணையில் பாலா: நூல் வெளியீடு

2 mins read
ebc288f6-ad20-4902-8729-00f82e172502
சிறுவர்களை ஈர்க்கும் வண்ணக் கதாப்பாத்திரங்கள் கொண்ட கதைப் புத்தகம். - படம்: ஜுனைதா கபூர்

சிறுவர்களுக்கு நகர்ப்புற விவசாயம் குறித்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ள ‘நகர்ப்புறப் பண்ணையில் பாலா’ எனும் நூல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகத்தில் நடைபெறும் நிகழ்வில் சிறுவர்களுக்கான கதை சொல்லல், விவசாயம் குறித்து சிறுவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் அமைந்த பலகை விளையாட்டுகள் உள்ளிட்டவை இடம்பெறும்.

இந்நிகழ்ச்சியில், உள்ளூர் நகர்ப்புற விவசாயிகள் குழந்தைகளுடன் கலந்துரையாடி, செடி வளர்ப்பு முறை, அடிப்படைகள் குறித்து செயல்முறை விளக்கங்களை வழங்க உள்ளனர்.

இக்கதைநூலின் மூலமும் நிகழ்ச்சியின் மூலமும் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்கறிகள், பழங்களின் பெயர்கள் குறித்தும், அவை எவ்வாறு விளைகின்றன என்பது குறித்தும் சிறுவர்கள் அறிந்துகொள்வர் எனக் கூறினார் இந்நூலை எழுதிய ஜுனைதா கபூர், 53.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள இந்நூல், சிறுவர்களின் ரசிப்புத்தன்மைக்கேற்ப அழகிய படங்களுடன் வெளிவர உள்ளது. முதன்முறை நகர்ப்புற பண்ணையைப் பார்வையிடும் சிறுவன் பாலாவின் அனுபவங்கள், கற்றல் ஆகியவை குறித்து விளக்குகிறது.

இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதியின் ஆதரவுடன் இந்தப் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள பட்டயக் கணக்காளரும், இயற்கை, விவசாய ஆர்வலருமான ஜுனைதா, தாம் குழந்தைப்பருவத்தில் பார்த்து வளர்ந்த பண்ணைகளை இப்போதைய தலைமுறையினர் பார்க்க வாய்ப்பு இல்லாமையால் புத்தகம் மூலம் அத்தகைய அனுபவத்தை ஏற்படுத்தித் தர முயன்றுள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்து தற்போதைய சூழலில் தேவைப்படும் சிக்கல் தீர்ப்புத் திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை குறித்தும் கற்க ஏதுவாக இந்நூலில் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

கார்பன் தடம், நீடித்த நிலைத்தன்மை, தன்னிறைவு வாழ்வியல் குறித்து விளக்கும் இந்நூல் சிறுவர்களுக்கு முக்கியப் பாடங்களைக் கற்றுத்தரும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்