சிங்கப்பூர்ப் பொருளியல் வளரவும் உலகளவில் சிறந்து விளங்கவும் வெளிநாட்டுத் திறனாளர்களைத் தொடர்ந்து வரவேற்பது அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், சமூகப் பிணைப்பைப் பேணுவதில் கவனமான அளவீடு அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
இவ்விரு தவிர்க்க முடியாத அம்சங்களுக்கு இடையே, உள்ளார்ந்து இருக்கும் பதற்றநிலைகளைச் சமாளிப்பதே சிங்கப்பூர் எதிர்நோக்கும் மிகச் சிக்கலான, நீண்டகாலச் சவாலாக இருக்கும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
“நமக்கான அரசியல் வெளியை உருவாக்கவும் நாம் முன்னோக்கிச் செல்லவும் நம்மால் முடிந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். வெளிநாட்டவர்கள், விழுமியங்கள், சமூகக் கட்டிறுக்கம் - இவற்றின்மீது கொண்டுள்ள கவலைகள் நியாயமற்றவை அல்ல. ஏனெனில், இது ஒரு நகரம் மட்டுமன்று; நாம் ஒரு சமூகம், நாம் ஒரு நாடு,” என்றார் பிரதமர்.
காலப்போக்கில், பகிர்ந்த விழுமியங்களாலும், செயல்களைச் செய்யும் வழிமுறைகளாலும், சமூகப் பிணைப்பாலும் சிங்கப்பூர் அடையாளம் வலுப்பெற்றது. வெளிநாட்டுத் திறனாளர்களையும் அனுபவங்களையும் வெவ்வேறு கண்ணோட்டங்களையும் கொண்டுவருவதன் மூலம் அந்த அடையாளத்திற்குச் செறிவூட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
ஆயினும், வெவ்வேறு பின்னணி என்பதால், குறைந்தது தற்காலிகமாக அவை நீர்த்துப்போகவும் செய்துவிடும் என்றார் பிரதமர்.
“நீங்கள் சீனாவிலிருந்து வரலாம், ஆனால் நீங்கள் சிங்கப்பூர் சீனர் அல்லர். நீங்கள் இந்தியாவிலிருந்து வரலாம், ஆனால் நீங்கள் சிங்கப்பூர் இந்தியர் அல்லர்.
“சிங்கப்பூர் சீனருக்கும் சீனாவிலிருந்து வந்த சீனருக்கும் வேறுபாடு உண்டு. அதுபோல், சிங்கப்பூர் இந்தியருக்கும் இந்தியாவிலிருந்து வந்த இந்தியருக்கும் வேறுபாடு உண்டு,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
உண்மையில் இது அக்கறைக்குரிய விஷயம் என்பதை ஒத்துக்கொண்ட திரு லீ, அதே நேரத்தில் புதியனவற்றை உருவாக்க சிங்கப்பூருக்குத் திறனாளர்கள் தேவை என்றும் ஒருபோதும் சிங்கப்பூர் போதிய திறனாளர்களைக் கொண்டிருக்காது என்றும் சொன்னார்.
“கட்டுமானம் போன்ற துறைகளில் பணியாற்ற ஊழியர்கள் தேவை. சிங்கப்பூரர்கள் செய்யக்கூடிய வேலைகள் இருந்தாலும் இன்னும் பலர் தேவைப்படலாம்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
அதனால், சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு நன்மை பயக்கக்கூடிய, சிங்கப்பூர் ஊழியர் தேவையை ஈடுகட்டக்கூடிய, அதே நேரத்தில் சமூக நியதியைக் கட்டிக்காக்கும் வகையிலும் உரசலை, முரணை ஏற்படுத்தாத வகையில், ஒரு கட்டுப்பாடான வழிமுறையில் வெளிநாட்டவர்களை அனுமதிப்பதன்மூலம் அரசாங்கம் நிலைமையைச் சமாளித்து வருகிறது என்று அவர் விளக்கினார்.
புதியவர்களை எதிர்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதிசெய்வதும் அதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
“பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளீர்கள். வெளிநாட்டு ஊழியர்கள் எங்கு செல்வார்கள்? வார இறுதிகளில் அவர்களுக்கும் பொழுதுபோக்கு தேவை,” என்றார் பிரதமர்.
அது, இங்கு வருவோருக்குச் சிங்கப்பூர் விதிமுறைகளைக் கற்பிப்பதும் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர்கள் நேரடியாகச் சிங்கப்பூரர் ஆகிவிட மாட்டார்கள். ஆனாலும், அவர்கள் தான் ஒரு விருந்தினர் என்பதையும் நல்ல விருந்தினராக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்,” என்றார் திரு லீ.
அதே வேளையில், ஊழியர் அணியை நிறைவுபடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் எந்த அளவிற்கு முக்கியம் என்பதைச் சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் புதியவர்களைச் சென்றடைய முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை ஒதுக்கீடு, தீர்வை, எம்பிளாய்மென்ட் பாஸ் செயல்முறை, ஊதிய வரம்பு, கல்வித் தகுதி உள்ளிட்ட வழிகளில் வெளிநாட்டு ஊழியர் அளவைச் சரியான விகிதத்தில் வைத்திருக்க அரசாங்கமும் தன் பங்கை ஆற்றுகிறது.
எம்பிளாய்மென்ட் பாஸ் விண்ணப்பங்களை மதிப்பிட சென்ற ஆண்டு ‘காம்பஸ்’ எனும் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகளைச் சுட்டிய பிரதமர் லீ, “அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். அதற்குச் சிறிது காலம் ஆகும்.
“அதனை நாம் மெருகூட்டுவோம் என்பதில் உறுதியாக உள்ளேன். ஆயினும், அவற்றை நாம் செய்தாக வேண்டும்; அவ்வப்போது சிறுசிறு மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.
“வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரையும் அனுப்பிவிடலாம், நாளைக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிவிட முடியாது,” என்று குறிப்பிட்டார்.
“அதனால்தான் முன்னோக்கிச் செல்லும் வழியை உணருங்கள் என்று கூறுகிறேன். ஒருவர் தானியக்க விமானியாக இருக்க முடியாது,” என்றார் அவர்.
வெளிநாட்டு ஊழியர் விவகாரம் குறித்து அவ்வப்போது நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம் என்றும் அவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயலலாம் என்றும் திரு லீ கூறினார்.
ஆயினும், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள்வரை எல்லா நிறுவனங்களும் செயல்பட வெளிநாட்டு ஊழியர்கள் தேவை என்பதையும் அதன்மூலமே சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து நல்ல வேலைகள் கிடைக்கும் என்பதையும் அவர்கள் உணர்வர் என்றும் பிரதமர் சொன்னார்.
“சிங்கப்பூர் வளர வேண்டும் என நாம் விரும்பினால், நாம் கடுமையாக ஆராய்ந்து அதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
“இது தொடர்ச்சியான, நீண்டகாலச் சவால்.
“உலகில் பல நாடுகள் தன்னைப்பேணித்தனத்தை நாடும் நிலையில், சிங்கப்பூர்ப் பொருளியலும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது,” என்றார் பிரதமர்.
“அதனால்தான் சிங்கப்பூர் தடையற்ற வணிகத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்குவித்து வருகிறது; வணிக, முதலீட்டிற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.
“பல நாடுகளும் தங்கள் விருப்பம்போல செயல்பட்டு வருவதால் உலக வணிக நிறுவனம் இப்போது முடங்கிப்போயுள்ளது.
“அதனால் சிங்கப்பூர் மற்றக் கூட்டமைப்புகளில் சேர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது,” என்றும் பிரதமர் லீ தமது நேர்காணலில் விளக்கினார்.
எடுத்துக்காட்டாக, மின்பொருளியல் போன்ற புதிய துறைகளில் சிங்கப்பூர் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக பிரதமர் கூறினார். பிரிட்டன், ஆஸ்திரேலியாவுடனான மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடுகள், நியூசிலாந்து, சிலியுடனான பலதரப்பு மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு ஆகியவற்றை அதற்குச் சான்றாக அவர் சுட்டிக்காட்டினார்.
“நாம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். சிறிய அளவிலான தளங்கள் என்றாலும், நமக்கு அவை எல்லாமே மிக முக்கியமானவைதான்,” என்று திரு லீ கூறினார்.