ஜோகூர் பாரு: வெளிநாட்டு சுயதொழில் ஊழியர்கள் (freelancers) சிங்கப்பூரில் திருமணச் சேவைகள் (creative services) வழங்குவதை சிங்கப்பூர் அண்மையில் தடை செய்தது.
அதனால் ஜோகூரில் உள்ள, திருமணப் படக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருமணப் படங்களை எடுக்கும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், சிங்கப்பூரில் தங்களிடம் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த பணிகளைக் கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
திருமணத்துக்கு முன்பு இடம்பெறும் சிறப்புப் படமெடுப்பு, திருமணத்தன்று இடம்பெறும் புகைப்படம் எடுப்பது ஆகியவற்றை அந்நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சில நிறுவனங்களின் சேவைகளை நாடுவோரில் 80 விழுக்காட்டினர் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
சுற்றுப்பயண விசா அல்லது மாணவர் விசாவில் சிங்கப்பூர் வருபவர்கள் இங்கு படமெடுப்பு, ஒப்பனைச் சேவைகளை வழங்கக்கூடாது என்று கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சும் ஒளி, ஒலி, புத்தாக்க உள்ளடக்க நிபுணர்கள் சங்கமும் கூட்டறிக்கையில் நினைவூட்டின.
தகுந்த வேலை உரிமம் இல்லாமல் இங்கு பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டோருக்கு 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதனால், சிங்கப்பூரில் படமெடுப்பை நடத்திக்கொள்ள ஆசைப்படும் மலேசியத் தம்பதியும் சட்டத்தை மீறிவிடுவோமோ என்ற அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.