நோயாளியின் மரணத்துக்குக் காரணமான மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்ய தடை

நோயாளியின் மரணத்துக்குக் காரணமான மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்ய தடை

2 mins read
9729e957-b15d-4400-be3b-1a1be451cf5a
நோயாளியின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் மருத்துவரின் வழக்கு நிலுவையில் உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அறுவைசிகிச்சையின்போது தவறான இரத்த நாளங்களைத் துண்டித்து நோயாளி ஒருவரின் மரணத்திற்குக் காரணமானதாகக் கடந்த மார்ச் மாதம் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவர், பெரும்பாலான அறுவைசிகிச்சைகளைச் செய்ய 18 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மருத்துவச் சங்கம் அந்தத் தடைகளைக் கோரியிருந்தது.

அந்த மருத்துவர் மனித உடற்கூற்றியல் குறித்து அடிப்படையில் தவறான புரிதலைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அது ஒருமுறை மட்டும் நடந்த தவற்றைப் போல் தெரியவில்லை என்றும் சங்கம் தெரிவித்தது.

பொதுமக்களைப் பாதுகாக்கவும் பொதுநலனைப் பேணவும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிடப்பட்ட தீர்மானத்தின்படி, டாக்டர் ஃபோங் யான் கிட்மீது அந்த முடிவு, சிங்கப்பூர் மருத்துவக் குழுமத்தின் இடைக்கால உத்தரவுக் குழுவால் விதிக்கப்பட்டது.

54 வயதான சிங்கப்பூரரான டாக்டர் ஃபோங், சிறுநீரக அறுவைசிகிச்சையின்போது அலட்சியமாகச் செயல்பட்டு 63 வயது பெண்ணின் மரணத்திற்கான குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.

2022ஆம் ஆண்டு ராஃபிள்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற நுண்துளை அறுவைசிகிச்சையின்போது, அவர் தவறான இரத்த நாளங்களைத் துண்டித்ததாகவும் சரியான நாளங்கள்தான் துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்காமல் அறுவைசிகிச்சையை முடித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் விளைவாக, நோயாளியின் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளுக்குப் போதிய இரத்த ஓட்டம் செல்லாமல் திசுக்கள் செயலிழந்தன. அந்தச் சிகிச்சைக்கு சில நாள்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.

திருவாட்டி டான் பீ ஹுவாவின் மரணம் குறித்த மரண விசாரணை அதிகாரி அறிக்கையில், அவர் மருத்துவச் சிகிச்சையின் காரணமாகவே உயிரிழந்தார் என்றும் அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அடுத்த 18 மாதங்களுக்கு முதன்மை, இரண்டாம் நிலை அல்லது உதவி அறுவைசிகிச்சை நிபுணராக டாக்டர் ஃபோங் எந்தவொரு அறுவைசிகிச்சையையும் செய்யக்கூடாது.

முதன்மைப் பராமரிப்புச் சூழலில் பொருத்தமாகச் செய்யப்படும் சிறிய மருத்துவமனை நடைமுறைகளுக்கு மட்டுமே அதில் விலக்கு உண்டு.

அவர் பணிபுரியும் அல்லது பணிபுரிய உத்தேசித்துள்ள அனைத்து இடங்கள் குறித்தும் சங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவப் பணிக்காக அவரை வேலைக்கு அமர்த்தும் எந்தவோர் அமைப்பிடமும் அல்லது தனிமனிதரிடமும் தமக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனைகளைப் பற்றி அவர் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

டாக்டர் ஃபோங் மீதான குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்