கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றியது உட்பட நிதி சார்ந்த பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர் ஒருவரிடம் பங்ளாதேஷ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், தமது கட்சிக்காரரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்ளாதேஷில் பிறந்தவரான சைஃபுல் ஆலம் மசூத், 64, தற்போது பங்ளாதேஷின் மத்திய வங்கியான பங்ளாதேஷ் வங்கி, குற்றப் புலனாய்வுத் துறை (பங்ளாதேஷ்), ஊழல் தடுப்பு ஆணையம், பங்ளாதேஷ் பங்குச் சந்தை ஆணையம் ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அவருடைய மனைவி ஃபர்ஸானா பர்வீன், 52, மகன்கள் அஷ்ரஃபுல் ஆலம், 27, அஷானுல் ஆலம், 31, ஆகியோரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அக்குடும்பத்திற்கு நெருக்கமானவர்களையும், குறிப்பாக எஸ். ஆலம் குழுமத்துடன் தொடர்புடையோரையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அக்குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான திரு ஆலம், உணவு, உற்பத்தி, எரிசக்தி, போக்குவரத்து, சொத்துச் சந்தை, தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், திரு ஆலமும் அவருடைய கூட்டாளிகளும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் 113,245 கோடி டாக்கா (S$12.89 பில்லியன்) கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகக் கூறி, அதன் தொடர்பில் பங்ளாதேஷ் குற்றப் புலனாய்வுத் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணையைத் தொடங்கியது.
அத்துடன், திரு ஆலம் போலி ஆவணங்கள், பொய்த் தகவல்கள் மூலம் ஆறு பங்ளாதேஷ் வங்கிகளில் கடன் பெற்றதாகவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் அவர் கெனாலி லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன்மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாகவும் அந்த அமைப்பு சந்தேகிக்கிறது.
ஆனால், “தாங்கள் செயல்படும் நாடுகளில், அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் இணங்கி, எப்போதுமே முறையாகவும் சட்டபூர்வமாகவும் தொழில்புரிந்து வந்துள்ளோம் என்பதில் திரு ஆலம் உறுதியாக இருக்கிறார்,” என்று சிங்கப்பூரின் வோங் பார்ட்னர்ஷிப் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த, அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணைய (ஏக்ரா) ஆவணங்களின்படி, திரு ஆலமும் திருவாட்டி பர்வீனும் 2009ஆம் ஆண்டில் கெனாலி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினர்.
2014ஆம் ஆண்டில் அந்நிறுவனம் லிட்டில் இந்தியாவிலுள்ள ஹோட்டல் கிராண்ட் சான்செலரை $248 மில்லியனுக்கு வாங்கியது. பலமுறை பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த ஹோட்டல், தற்போது ‘ஹில்டன் கார்டன் இன் சிங்கப்பூர் சிராங்கூன்’ என்ற பெயரைத் தாங்கியுள்ளது.
பின்னர் 2017ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் பெயர் ‘வில்கின்சன் இன்டர்நேஷனல்’ என மாற்றப்பட்டதாகவும் லிட்டில் இந்தியாவிலுள்ள சென்ட்ரியம் ஸ்குவேரின் அனைத்துச் சில்லறை வணிக இடத்தையும் $135 மில்லியனுக்கு அது வாங்கியதாகவும் ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

