வாடிக்கையாளர்கள், விரைவில் மின்னிலக்க வங்கி வில்லையைச் செயல்படுத்தும்போது சிங்பாஸ் முக அடையாளச் சோதனை (SFV) முறையைக் கொண்டு தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும்.
வங்கி வாடிக்கையாளர்களை மோசடிகளில் சிக்காமல் பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள முக்கிய வங்கிகள் அடுத்த மூன்று மாதங்களில் இந்த முறையைக் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தும். சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் புதன்கிழமையன்று (செப்டம்பர் 18) வெளியிட்ட கூட்டறிக்கையில் இத்தகவலை வெளியிட்டன.
முக அடையாளச் சோதனை முறையைச் சேர்ப்பதன் மூலம் பிறரின் மின்னிலக்க வங்கிக் கருவியை மோசடிக்காரர்கள் பயன்படுத்துதைத் தவிர்க்கலாம் என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் குறிப்பிட்டன. ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல் (OTP), வங்கி அட்டை தகவல்கள் போன்றவற்றைக் கொண்டு மோசடி மேற்கொள்ளப்படுவதைத் தவிர்க்கலாம் என்று அவ்விரு அமைப்புகளும் குறிப்பிட்டன.
முக அடையாளச் சோதனை முறை, தற்போது நடைமுறையில் இருக்கும் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முறைகளுடன் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள சூழல்களில் முக அடையாள சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி மின்னிலக்க வங்கிக் கருவி பயன்படுத்தப்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் அடையாளம், தேசியப் பதிவுகளில் இடம்பெற்றுள்ள தகவல்களுடன் சரிபார்க்கப்படும்.
சிங்பாஸ் கணக்கு இல்லாதோர், அதற்குப் பதிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் மின்னிலக்க வங்கிக் கருவியைச் செயல்படுத்துவதற்கு முன்பு சிங்பாஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
“மோசடிகளுக்கு எதிராக வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில் வாடிக்கையாளர்களும் விழிப்புடன் இருந்து நல்ல இணையப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்,” என்றார் சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் இயக்குநர் ஓங்-அங் அய் பூன்.
மோசடிகளில் சிக்காமல் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் நாணய ஆணையம், தொடர்ந்து வங்கிகளுடன் இணைந்து செயல்படும் என்றார் கொள்கை, கட்டண, நிதிக் குற்றப் பிரிவின் துணை நிர்வாக இயக்குநரான லூ சியூ யீ.
தொடர்புடைய செய்திகள்
யுஓபி வங்கி, இந்நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தனது யுஓபி டிஎம்ஆர்டபிள்யு (UOB TMRW) செயலியில் முக அடையாளச் சோதனை முறையைச் செயல்படுத்தப்போவதாகவும் அவ்வங்கி புதன்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.