உடல் எடையைக் குறைக்கக்கூடிய பொருளாக விளம்பரப்படுத்தப்படும் ‘சோக்கோ ப்ரீமிக்ஸ் காப்பி’ஐ வாங்கவேண்டாம் என்று பயனீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாரடைப்பையும் பக்கவாதத்தையும் ஏற்படுத்தக்கூடிய தடைசெய்யப்பட்ட பொருள் அதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘சிபுடிராமின்’ எனும் அந்தப் பொருள், 2010ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ) கூறியது.
‘சோக்கோ ப்ரீமிக்ஸ் காப்பி’ உள்ளூர் மின் வர்த்தகத் தளங்களில் கிடைக்கப்பெறுகிறது.
அதற்கான விற்பனை விளம்பரங்களை அகற்ற, அமைப்பு மற்ற இணைய மின் வர்த்தகத் தளங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.
உடனடியாக அந்தப் பொருளின் விற்பனையை நிறுத்துமாறு விற்பனையாளர்களுக்கு அது எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அந்தப் பொருளை வாங்கியவர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உடல்நலம் குறித்து கவலைப்படுவோர் மருத்துவ உதவியை நாடவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

