வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்குத் தடைவிதிக்க சாத்தியமில்லை: அமைச்சர்

2 mins read
95b21b8b-da4c-4a03-85f8-8cb5dbefdcc4
லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்லத் தடைவிதிப்பது சில சிறிய, நடுத்தர நிறுவனங்களின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி, மூடப்படும் நிலைக்கு அவற்றைத் தள்ளிவிடலாம் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்குத் தடைவிதிக்க நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் அப்படிச் செய்வதால் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார்.

“பல குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்களது கருவிகள், பொருள்களை ஒரு வாகனத்திலும் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களை இன்னொரு வாகனத்திலும் ஏற்றிச் செல்வது நடைமுறைக்கு ஏற்றதாகவும் சாத்தியமானதாகவும் இராது,” என்று டாக்டர் கோர் புதன்கிழமை (பிப்ரவரி 26) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

அத்தகைய தடை சில சிறிய, நடுத்தர நிறுவனங்களின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி, மூடப்படும் நிலைக்கு அவற்றைத் தள்ளி, அதனால், உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் வேலையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் சொன்னார்.

அத்துடன், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், பள்ளிகள், மருத்துவமனைகள், எம்ஆர்டி ரயில் பாதைகள் போன்ற முக்கியத் திட்டங்களில் தாமதம் போன்ற மறைமுகத் தாக்கத்தை அது ஏற்படுத்தக்கூடும் என்றும் அதன் விளைவாக சிங்கப்பூரர்களுக்கு அதிகச் செலவு ஏற்படலாம் என்றும் அவர் விளக்கினார்.

லாரிகளின் பின்புறம் ஏற்றிச் செல்லப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் அதனை ஒட்டுமொத்தமாகத் தடைசெய்வது குறித்தும் போக்குவரத்து அமைச்சு எத்தகைய கருத்துகளைப் பெற்றது என்று நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய டாக்டர் கோர், பேருந்து ஓட்டுநர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை இருப்பதால் லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் நடைமுறைக்குத் தடைவிதிப்பது சாத்தியமில்லை என்றார்.

அதே நேரத்தில், லாரிகளுக்கு மாற்றாக பேருந்து போன்ற வாகனங்களைப் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்கிறது என்றும் அவர் சொன்னார்.

அதற்கு எடுத்துக்காட்டாக, உள்ளூர்க் கட்டுமான நிறுவனமான வோ ஹப், தனது பெரும்பாலான ஊழியர்களைப் பேருந்துகளில் ஏற்றிச் செல்வதை அவர் சுட்டினார்.

“ஊழியர்களின் போக்குவரத்து தொடர்பில் பாதுகாப்பான வழிமுறைகளுக்கு மாறத் தங்களால் முடிந்த அளவு முயல்வதாகத் தொழிற்சங்கங்களும் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன,” என்று டாக்டர் கோர் கூறினார்.

கட்டுமானத் தளங்களுக்கு அருகிலேயே ஊழியர் தங்குவிடுதிகளைக் கட்டுவது போன்ற வழிமுறைகள் மூலம், ஊழியர்களை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய தேவையைக் குறைக்க அரசாங்கம் முயன்றுவருவதாகவும் அவர் சொன்னார்.

கப்பல் பட்டறைகளிலும் பெரிய அளவிலான கட்டுமானத் தளங்களிலும் அத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துதல், அவற்றின் ஓட்டுநர்களுக்குப் போதிய ஓய்வு அளிக்கப்படுதல், மழையிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்கும் வகையில் கட்டாயமாக மறைப்புகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதை டாக்டர் கோர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்