ஆஸ்திரேலியாவின் தேசிய ஒலிபரப்பு நிறுவனத்தின் அண்மைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில், சிங்கப்பூரின் அரசியல் முறை குறித்து சில ஆதாரமற்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஆஸ்திரேலியாவுக்கான சிங்கப்பூரின் தூதர் அனில் நாயர் கூறியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் படைப்பாளரும் அதில் கலந்துகொண்டவர்கள் சிலரும் சிங்கப்பூரை ‘ஒரு-கட்சி நாடு’, ‘தனிநபர் ஆட்சி’, ‘குறைபாடுள்ள ஜனநாயகத்தின் விளிம்பில் உள்ளது,’ என்றெல்லாம் வருணித்ததாகத் திரு நாயர் குறிப்பிட்டார்.
“நாடாளுமன்றத்தில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக சிங்கப்பூர் அறிமுகப்படுத்திய குழுத்தொகுதிகள், எதிர்த்தரப்புக்கு இடையூறு விளைவிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட உத்தி என்று அவர்கள் கூறினர்,” என்றார் திரு நாயர்.
‘சிங்கப்பூரும் லீ குவான் யூவின் நீண்ட நிழலும்’ என்பது ‘ஏபிசி ரேடியோ நேஷனல்’ வானொலியில் இடம்பெற்ற ‘ரியர் விஷன்’ நிகழ்ச்சியின் பெயர்.
அது மார்ச் 7ஆம் தேதி ஒலிபரப்பப்பட்டது.
‘ரியர் விஷன்’ படைப்பாளர் ஆண்டனி ஃபன்னலுடன், ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஸ்டெஃபன் ஓர்ட்மேன், ‘ஃபிலிண்டர்ஸ்’ பல்கலைக்கழகத்தின் டாக்டர் மைக்கல் பார், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆய்வாளராக இருக்கும் டாக்டர் கில்லியன் கோ, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான மன்றத்தில் தென்கிழக்காசியா, தெற்காசியத் துறைகளுக்கான மூத்த ஆய்வாளர் ஜொஷுவா குர்லாண்ட்ஸிக் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“எல்லாராலும் மதிக்கப்படும் ஒரு தேசிய ஒலிபரப்பு நிறுவனமான ‘ஏபிசி’, ஒருதலைபட்சமான கருத்துகளைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது ஆச்சரியத்தை அளிக்கிறது. மக்கள் எதிர்பார்க்கும் செய்தியாளர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அது தவறிவிட்டது,” என்று திரு நாயர் கூறினார்.


