கடற்கரையோரக் கடைகளில் கூட்டம் குறைந்தது

2 mins read
de3c777d-9a4f-4f99-83ad-701c096972e6
பிடோக் படகுத்துறைமுகத்திலிருந்து பார்க்கையில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கரையோரத்தில் ஜூன் 16ஆம் தேதி காலை 10 மணியளவில் காணப்பட்ட எண்ணெய்க் கசிவு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

பாசிர் பாஞ்சாங் முனைய எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தை அடுத்து சிங்கப்பூரின் கடற்கரையோரக் கடைகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தீவின் வெவ்வேறு கடற்கரையோரப் பகுதிகளுக்குப் பரவியதை அடுத்து மக்கள் கூட்டம் அவ்விடங்களில் குறைந்தது இதற்குக் காரணம்.

பேரளவில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் வர்த்தகம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடற்கரையோரக் கடைக்காரர்கள் சிலர் கூறினர்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கரையோரத்தில் பெரும்பகுதியில் எண்ணெய்ப் படலம் காணப்பட்டதால் பொதுமக்களுக்கு அப்பகுதி மூடப்பட்டுள்ளது. அதனால் நீர் விளையாட்டுச் சேவை வழங்கும் நிறுவனங்கள் நடவடிக்கைகளை ரத்து செய்தன.

செந்தோசாவின் தஞ்சோங், சிலோசோ, பலவான் கடற்கரைகளில் நீந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

வழக்கமாகக் காணப்படும் கூட்டத்தில் பாதியளவுகூட இன்று கடற்கரையில் காணப்படவில்லை என்று ‘அலோகா சீ ஸ்போர்ட்ஸ் சென்டரின்’ துணைப் பொது மேலாளர் மேக்ஸ் ஓங் கூறினார்.

அந்த நிறுவனம், நீர் விளையாட்டுக் கருவிகளை வாடகைக்கு வழங்குவதோடு பயிற்சி வகுப்புகளையும் உணவுக்கடை ஒன்றையும் நடத்துகிறது.

கடற்கரையில் எண்ணெய்ப் படலம் காணப்படும்வரை நிலைமை மோசமாகவே இருக்கும் என்று கூறிய திரு ஓங், ‘சேதமடைந்த’ கடற்கரையைப் பார்ப்பது சோகமான காட்சி என்று குறிப்பிட்டார்.

நிஞ்சா கயாக்கர்ஸ் ஃபாயிலர்ஸ் எனும் நீர் விளையாட்டு நிறுவனம் காலவரையற்று அதன் பயிற்சி வகுப்புகளை நிறுத்திவைத்துள்ளதாகக் கூறியது.

வகுப்புகளைத் தள்ளிப்போடுவதாலும் ரத்து செய்வதாலும் இழப்பு ஏற்படும் என்பதை அது சுட்டியது.

எனினும் உணவுக் கடைகளில் வணிகம் மீட்சி காண்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

செந்தோசா கடற்கரையிலுள்ள விளையாட்டு மன்றங்களில் பலரும் முன்பதிவு செய்த நடவடிக்கைகளை ரத்து செய்வதாகத் தெரிகிறது. பெட்ரோல் நிரப்புமிடத்தில் நிலவுவது போன்ற வாடை பிடிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 14ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு, நெதர்லாந்துக் கொடியைத் தாங்கிய ‘வோக்ஸ் மாக்ஸிமா’ எனும் படகு, பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, சிங்கப்பூர்க் கொடியைத் தாங்கிய ‘பங்கர்’ கப்பலுடன் மோதியதில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

இச்சம்பவத்தை அடுத்து செந்தோசா, லேப்ரடார் இயற்கைப் பூங்கா, சதர்ன் தீவுகள், மரினா சவுத் பியர், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா போன்றவற்றின் கரையோரங்களில் அடர்த்தியான எண்ணெய்ப் படலம் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஜூன் 14ஆம் தேதி மாலைக்குப் பிறகு எண்ணெய்க் கசிவு ஏதும் இல்லை என்றும் கடலில் பரவிய எண்ணெய்யைத் துப்புரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

துப்புரவுப் பணியில் 18 படகுகள் ஈடுபடுத்தப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசியப் பூங்காக் கழகம், தேசியச் சுற்றுப்புற வாரியம், செந்தோசா மேம்பாட்டுக் கழகம் ஆகியவை தெரிவித்தன.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்