சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் மானியம் பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் படுக்கை வசதிகளில் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக புதிதாகக் கட்டப்படும் மருத்துவமனைகளில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
சுகாதார அமைச்சு கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அறிமுகம் செய்துள்ள தேசிய சுகாதார வசதி வடிவமைப்பு தரநிலைகளின்படி (HFDS) இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
தற்போது எட்டு நோயாளிகள் தங்கும் வார்டுகள் எதிர்காலத்தில் முற்றிலும் மாற்றப்பட்டு, ஆறு பேர் தங்குமிடங்களாகும். புதிய திட்டத்தின்படி, ‘பி2’, ‘சி’ பிரிவு வார்டுகள் ஒருங்கிணைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 2021ஆம் ஆண்டில் இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே அதிக வேறுபாடுகள் இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
மருத்துவமனையில் உள்ள பொதுப் பயனீட்டுக் குழாய் அமைப்புகள், மின்தூக்கிகள் போன்ற வசதிகள் ஒரே செயல்முறையின்கீழ் இயங்குவதும் வடிவமைப்பு தரநிலை மாற்றங்களில் உள்ளடங்கும்.
இந்த ஒருங்கிணைந்த மாற்றங்கள் பல நன்மைகளை வழங்கும். உதாரணமாக கட்டுமானத்துக்கான செலவு குறைக்கப்பட்டு, புதிய மருத்துவமனைகள் விரைவாகக் கட்டிமுடிக்கப்படும்.
தெங்கா கார்டன் அவென்யூவில் கட்டுப்பட்டுள்ள புதிய சமூக, பொது மருத்துவமனை (TGCH), டான் டோக் செங் மருத்துவக் கட்டடம், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள் ஆகியன இந்தப் புதிய தேசிய சுகாதார வசதி வடிவமைப்பு தரநிலைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
புதிய ஒருங்கிணைந்த திட்டத்தின்படி, மூன்று வகைகளாக நோயாளிகளின் படுக்கைகள் வகைப்படுத்தப்படுகின்றன.
‘ஏ’ வகையில் ஒரு படுக்கையும் ‘பி1’ வகையில் நான்கு படுக்கைகளும் ‘பி2’ அல்லது ‘சி’ பிரிவு வார்டுகளில் ஆறு படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, பி2 வார்டுகளில் ஐந்து அல்லது ஆறு படுக்கைகள் உள்ளன. சி பிரிவில் ஆறு முதல் 12 படுக்கைகள் உள்ளதாக மருத்துவமனைகளின் இணையப் பக்கம் தெரிவிக்கிறது.
தேசிய சுகாதாரக் குழுமம் (NHG), தேசியப் பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (NUHS), சிங்கப்பூர் சுகாதாரச் சேவை (Singhealth) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சுகாதார அமைச்சின் ‘எம்ஓஹெச் ஹோல்டிங்ஸ்’ (MOH Holdings) இந்த வடிவமைப்புத் திட்டத்தை மேம்படுத்தியுள்ளது.

