பிடோக் சென்ட்ரலில் காசநோய்க்காகப் பரிசோதிக்கப்பட்ட 3,169 பேரில் 85.1 விழுக்காட்டினருக்கு அந்நோய் இல்லை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
முன்னதாக, அந்தப் பகுதியில் காசநோய் பரவிய மூன்று குழுமங்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
எஞ்சிய 14.9 விழுக்காட்டினர், அதாவது, 473 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுக்குப் பரவக்கூடிய காசநோய் உள்ளதா, அல்லது அறிகுறி இல்லாத, மற்றவர்க்குப் பரவாத காசநோய் உள்ளதா என்பதை உறுதிசெய்ய நெஞ்சுப் பகுதிக்கான ஊடுகதிர்ப் பரிசோதனைக்கு அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மே மாதத் தொடக்கத்தில் ஒரு வாரம் நீடித்த அந்நடவடிக்கையிலிருந்து கிடைத்த பரிசோதனை முடிவுகளை தொற்றுநோய்க் கண்டறிதல், கட்டுப்படுத்தல், தவிர்த்தலுக்கான அமைப்பு (சிடிஏ) புதன்கிழமை (மே 13) அறிவித்தது.
“இதுவரை கிடைத்துள்ள பரிசோதனை முடிவுகள் இயல்பான எதிர்பார்ப்புகளுக்குள் உள்ளன,” என்று ‘ஹார்ட்பீட்@பிடோக்’ பகுதிக்குச் சென்றிருந்த சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கூறினார். நோய்த்தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டோருக்கு அங்கு மே 13 முதல் மே 15 வரை ஊடுகதிர்ச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
அந்த முடிவுகள், முன்னதாக, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள ‘ஏபிசி பிரிக்வொர்க்ஸ்’ சந்தை, உணவு நிலையத்தில் ஏற்பட்ட காசநோய் நிலவரத்தின் முடிவுகளைப் போலவே உள்ளதாகத் திரு டான் கூறினார்.
சென்ற 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அந்தப் பகுதியில், பரவக்கூடிய காசநோய்ச் சம்பவங்கள் இல்லை என்று கடந்த மே 5ஆம் தேதி சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், நோய்த்தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 473 பேரில் பெரும்பாலோர், மற்றவர்க்குப் பரவாத காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ‘சிடிஏ’ கூறியது.
அத்தகைய அறிகுறியில்லாத காசநோய் சிங்கப்பூரில் பொதுவானது. வயது அதிகரிக்கும்போது இவ்வகை காசநோய் ஏற்படும் சாத்தியம் கூடுகிறது.
அத்தகைய காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான பெரியோரில் ஏறக்குறைய 90 விழுக்காட்டினருக்கு, காசநோய்க் கிருமிகள் உடலில் செயலற்ற நிலையிலேயே இருக்கும் என்று ‘சிடிஏ’ கூறியது.

