துவாஸ் சாலையில் ‘படுக்கையறை’

1 mins read
df26295c-fbdc-4014-b579-2fa055cc8a29
சம்பவம் பதிவான படம் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது. - படம்: SGRV Front Man / ஃபேஸ்புக்

அரசாங்க வீடுகளைக் கட்டுவதற்காக முன்னதாகவே வடிவமைக்கப்பட்டு அமைக்கப்படும் முன்வார்ப்புக் கட்டுமானம் (concrete block) துவாஸ் வட்டாரத்தில் சாலை நடுவே காணப்பட்டது.

இச்சம்பவம் பதிவான படம் ஒன்று SGRV Front Man ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை (மார்ச் 19) பதிவேற்றம் செய்யப்பட்டது. சன்னல் கம்பிகளைக் கொண்ட இந்த ‘படுக்கையறைப் பகுதி’ சாலையின் இடது தடத்தில் கிடந்தது. சிறிது தூரம் அப்பால் இதேபோன்ற ‘வீட்டுப் பகுதிகள்’ உள்ள லாரி ஒன்று காணப்பட்டது.

இக்காட்சியைக் கொண்ட படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. படத்துக்கு 1,000க்கும் மேற்பட்டோர் உணர்குறிகளைப் பதிவிட்டிருந்தனர்.

மேலும், வியாழக்கிழமை (மார்ச் 20) மாலை 5.10 மணி நிலவரப்படி படத்துக்கு 330க்கும் அதிகமான கருத்துகள் பதிவிடப்பட்டன.

துவாஸ் சவுத் அவென்யூ 9ல் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து புதன்கிழமை காலை 7.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. சம்பவம் குறித்து அதிக தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. படத்தில் காணப்படும் லாரியின் ஓட்டுநரான 31 வயது ஆடவர் ஒருவர், காவல்துறை விசாரணையில் ஒத்துழைத்துவருகிறார்.

இச்சம்பவம் குறித்து இணையவாசிகள் சிலர் பாதுகாப்பு சார்ந்த கவலைகளை வெளிப்படுத்தினர். வேறு சிலர் சாலை நடுவே ‘சன்னலுடனான படுக்கையறை’ இருந்ததை எண்ணி வேடிக்கையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்