ஒரு சிங்கப்பூரராக இருப்பதும் தமிழராக இருப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று தெரிவித்துள்ளார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்.
“தமிழ் சமூகத்திற்குச் சேவையாற்றும்போது தேசத்துக்கும் நாம் எவ்வாறு தொடர்ச்சியாகப் பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
நிச்சயமற்ற சூழலில் ஒற்றுமையைத் தமது தேசிய தினச் செய்தியில் பிரதமர் லாரன்ஸ் வோங் பகிர்ந்ததைச் சுட்டிக்காட்டிய டாக்டர் ஹமீது, ஒற்றுமை என்பது தமிழ் சமூகத்திற்குப் புதிதல்ல என்று விளக்கினார்.
“தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவும் தமிழ் உரிய இடங்களில் இடம்பெறவும் நமது சமூகத் தலைவர்கள் வழி அமைத்துள்ளனர்,” என்றும் அவர் பாராட்டினார்.
ஒரு சமுதாயமாக நாம் சிறப்பாகச் செயல்பட்டு, நமது பலத்திற்கும் மேலாகச் சாதித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
தொடரும் சிங்கப்பூரின் 61வது தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழர் பேரவையின் தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் டாக்டர் ஹமீது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
வெள்ளை, சிவப்பு நிறங்கள் அணிந்தவாறு கிட்டத்தட்ட 200 பேர் தேசிய கீதத்தைச் சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் பாடினர்.
நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு நிகழ்ச்சிக்கு வருகையளித்தார்.
“சிங்கப்பூரர்கள் உலகக் குடிமக்களாகத் திகழ வேண்டும். நமது வலுவான வேர்களின் காரணமாக, நாம் எங்குச் சென்றாலும் வெற்றிபெறும் திறன் நமக்கு இருக்க வேண்டும்,” என்று அடுத்த 60 ஆண்டுகளுக்கான தமது கனவைத் தெரிவித்தார் டாக்டர் ஹரேஷ்.
மேடையில் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபை (சிக்கி), லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் (லிஷா), சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை (எஸ்ஐஇடி), சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் தமிழர் பேரவையுடன் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
கையெழுத்து நிகழ்ச்சியைப் பார்வையிட்டார் டாக்டர் ஹமீது.
“வருங்காலத்தில் தமிழ் சமூகத்துக்காகப் பயன்படும் சில முன்னெடுப்புகளை இந்த ஒப்பந்தங்கள் உறுதிசெய்யும்,” என்றார் தமிழர் பேரவையின் துணைத் தலைவரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருமான டாக்டர் மொய்னுதீன் நிசார் அன்வர்.
அத்துடன், தமிழர் பேரவை வழி தமிழ் சமூகத்துக்குச் சேவையாற்றிய ப. பாலகிருஷ்ணன், மசூது அப்துல் ரஹிமான், கலைசெல்வம், நா. ஆண்டியப்பன், ம. குணசேகரன், என்.ஆர். கோவிந்தன் ஆகிய அறுவருக்கு உன்னத சமூக சேவை விருது வழங்கப்பட்டது.
தமிழர் பேரவை ஏற்பாட்டில் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடக்கநிலை, உயர்நிலை, உயர்கல்வி மாணவர்களுக்கு நடைபெற்ற புதிர், கட்டுரை, கவிதைப் போட்டிகளின் வெற்றியாளர்களும் அங்கீகரிக்கப்பட்டனர்.


