மசெக வேட்பாளரின் தமிழ்ப் பேச்சுக்குப் பாராட்டு

மசெக வேட்பாளரின் தமிழ்ப் பேச்சுக்குப் பாராட்டு

2 mins read
15877359-8c65-4481-aad1-3d597460e6b2
செங்காங் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்கள் (இடமிருந்து) பெர்னடெட் கியாம், எல்மி நெக்மாகட், தியோடோரா லாய், லாம் பின் மின். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேட்புமனுத் தாக்கல் தினமான புதன்கிழமை (ஏப்ரல் 23) மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர் பெர்னடெட் கியாம், மக்களின் ஆதரவைக் கேட்டு தமிழில் சில வாக்கியங்களை உரைத்திருந்தார்.

யூசோஃப் இஷாக் உயர்நிலைப்பள்ளியில் செங்காங் குழுத்தொகுதிக்கான மசெக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது திருவாட்டி கியாம் தமிழில் பேசியிருந்தார்.

“வணக்கம். நாங்கள் பிஏபி செங்காங் அணி ‘கேண்டிடேட்ஸ்’ (வேட்பாளர்கள்). உங்கள் ஆதரவை எங்களுக்குக் கொடுங்கள். பிஏபிக்கு ‘வோட்’ பண்ணுங்கள்,” என்று திருவாட்டி கியாம், 38, தமிழில் பேசிவிட்டு தமது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) ஃபேஸ்புக்கில் பதிவிட்ட உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், திருவாட்டி கியாமின் முயற்சியைப் பாராட்டினார்.

“வேட்புமனுத் தாக்கல் தினத்தில் பெர்னடெட் கியாம் தமிழில் பேசியதைப் பலரைப்போல நானும் காணொளியில் கண்டேன்.

“இது வியக்கவைக்கும் முயற்சி. அவர் நன்றாகப் பேசினார். தமிழர்கள் வியப்பும் பெருமையும் அடைந்திருப்பர் என எண்ணுகிறேன். நான் பார்த்ததையும் கேட்டதையும் என்னால் நம்ப முடியவில்லை. நன்று பெர்னடெட்,” என்று திரு சண்முகம் பாராட்டினார்.

மேடையில் அரசியல் கட்சியினர் தமிழில் வணக்கம் கூறும் போக்கு அண்மையில் அதிகரித்துள்ள வேளையில், அதையும் தாண்டி திருவாட்டி கியாம் சிரமேற்கொண்டு தமிழில் வாசகங்களைக் கூறியிருப்பது இணையவாசிகளிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாட்டி கியாம், ‘கிரியேட்டிவ் ஈட்டரிஸ்’ நிறுவனத்தின் வர்த்தக உரிமையாளராக உள்ளார். இரு பிள்ளைகளுக்குத் தாயாரான அவர், செங்காங் குழுத்தொகுதி மசெக வேட்பாளராக ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டார்.

2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மசெகவில் தொண்டாற்றி வந்துள்ள திருவாட்டி கியாம், 2025 ஜனவரியில் மசெக செங்காங் ஈஸ்ட் கிளைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

குறிப்புச் சொற்கள்