2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பெற்றோரால் துன்புறுத்தப்பட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
இந்த இரண்டு சம்பவங்களிலும், குழந்தைகள் உயிரிழப்பதற்கு முன்பாக, அமைச்சின்கீழ் இயங்கும் பாதுகாப்புச் சேவைப் பிரிவுக்கு அந்தத் துன்புறுத்தல் குறித்த தகவல் கிடைக்கவில்லை என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் பூன் எழுப்பிய கேள்விக்குச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) அளித்த எழுத்துபூர்வ நாடாளுமன்றப் பதிலில் திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
மரணமுற்ற இரண்டு குழந்தைகள் ட்ரெவர் நியோ, ஸபெல் பே என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. ட்ரெவர், 2024 செப்டம்பரில் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோது, அவனது தாய் அவனை அடித்து மூச்சுத்திணறடித்ததால் உயிரிழந்தான். ஸபெல், 2023 ஜனவரியில் இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது, அவளது தாய் அவளை வலுக்கட்டாயமாக ஒரு கட்டிலில் போட்டதால் ஏற்பட்ட தலைக் காயங்களால் உயிரிழந்தாள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டிலும், மூன்று அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் சம்பந்தப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட குழந்தை வன்கொடுமை அல்லது புறக்கணிப்புச் சம்பவங்களின் எண்ணிக்கையையும் அத்தகைய சம்பவங்களில் கடுமையான காயங்கள் அல்லது மரணத்தில் முடிந்த சம்பவங்களின் எண்ணிக்கையையும் பற்றி திரு பூன் கேட்டார்.
அத்தகைய சம்பவங்களில் எத்தனை விழுக்காடு முன்னதாகக் குழந்தை பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கேட்டார்.
2025ல், பிறந்த குழந்தைகள் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் சம்பந்தப்பட்ட 687 குழந்தைக் கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இவற்றுக்கு, அதிக ஆபத்துள்ள குழந்தைக் கொடுமைச் சம்பவங்களை நிர்வகிக்கும் அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவையின் சட்டபூர்வ தலையீடு தேவைப்பட்டது.
இவற்றில் மூன்று சம்பவங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. ஆனால் எந்தக் குழந்தையும் உயிரிழக்கவில்லை என்று திரு மசகோஸ் தெரிவித்தார்.
வெலரி லீ (பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி), கண்ணில் தென்படும் காயங்கள் இல்லாதபோதும் குழந்தை துன்புறுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கும் பராமரிப்பாளர்களுக்கும், சுகாதார நிபுணர்களுக்கும் வழங்கப்படும் வழிகாட்டுதலைப் பற்றி திரு மசகோசிடம் கேட்டார்.
குழந்தை, கொடுமைக்கு ஆளானதாகச் சந்தேகப்படும் பராமரிப்பாளர்கள், உடலில் காயங்கள் ஏதும் தென்படாவிட்டாலும், அதுகுறித்து தேசிய வன்முறை, பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி மையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
