பானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் சிறிய நிறுவனங்களுக்கு உதவ ஆலோசனை

2 mins read
f9321b5b-5051-4605-86d5-ee50846ddb03
மென்பானங்கள். - கோப்புப் படம்

ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள புதிய தேசிய மறுசுழற்சித் திட்டம் தொடர்பில் பானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சிறிய நிறுவனங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை தேசியச் சுற்றுப்புற வாரியம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பானப் போத்தல்களை திருப்பித்தரும் திட்டத்தின்கீழ் 150 மில்லிலிட்டர் முதல் மூன்று லிட்டர் வரையிலான பானப் போத்தல்களை வாங்கும் நுகர்வோர் கூடுதலாக 10 காசு செலுத்துவார்கள்.

இது 150 மில்லிலிட்டர் முதல் 3 லிட்டர் டின்களுக்கும் பொருந்தும். நியமிக்கப்பட்ட சேகரிப்புச் சாவடிகளில் நுகர்வோர் மென்பானப் போத்தல்கள், டின்களை மறுசுழற்சி செய்வதற்காகப் போடும்போது அந்த வைப்புக் கட்டணமான 10 காசை அவர்கள்  திரும்பப் பெறலாம்.

இதன் தொடர்பில் வியாழக்கிழமை (ஜனவரி 15) ஃபேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டார் நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற  மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.

அந்தப் பதிவில், இந்தத் திட்டத்தின் தாக்கம் தொழில்துறை முழுவதும் மாறுபடும் என்பதை அரசாங்கம் அங்கீகரிப்பதாக அவர் கூறினார்.

மேலும், பொருள்கள் எவ்வாறு பதப்படுத்தப்பட்டு சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன என்பதையும், மொத்த உற்பத்தி அல்லது இறக்குமதியின் அளவைப் பொறுத்தது அது என்றும் கூறினார் கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான ஜனில்.

சிறிய அளவிலான பானங்ளை தருவிக்கும் சில இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் தளவாட வசதி உள்ளிட்ட இதரச் சவால்களைக் கவனத்தில் கொள்வதாகக் கூறினார் அவர்.

மேலும் அவ்வகையில் இத்திட்டத்தைச் செயலாற்றுவோர், இந்தச் சவால்களைச் சமாளிக்கவும், திட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக  நடைமுறை சார்ந்தும் நீக்குப்போக்கானதுமான வழிகளை ஆராய, பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களை ஈடுபடுத்தவும் முயன்று வருவதாகவும் திரு ஜனில் சொன்னார்.

இத்திட்டம் அமலுக்கு வரும்போது சிங்கப்பூரில் போத்தல், கேன்களில்  அடைக்கப்பட்ட பானங்களின் விலை 25 காசு முதல் 60 காசு வரை உயரக்கூடும் என்று இறக்குமதியாளர்களும் சிறு சில்லறை விற்பனையாளர்களும் கூறியிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்