நீதிக்காகத் தோள்கொடுத்த தொண்டூழியர்களுக்கு விருது

2 mins read
9151ebea-aebd-4bf4-ac2b-9a3b916923cd
நீதிக்கான நற்சேவைக்காக வழங்கப்பட்ட ‘நீண்டகாலச் சேவை விருது’ இந்த ஆண்டு இருவருக்கு வழங்கப்பட்டது. திரு அழகர்சாமி பழனியப்பன் (வலது), திரு மஹாதேவன் இலச்சுமாயா (இடது) இருவரும் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டனர். - படம்: சிங்கப்பூர் நீதிமன்றங்கள்

அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிசெய்யும் நீதிமன்ற நோக்கத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் சேவையாற்றிய தொண்டூழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

புதன்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற நீதிமன்றத் தொண்டூழியர்கள் பாராட்டு நிகழ்ச்சியில், ‘நீதி வழங்குதல் மாற்றத்தை ஏற்படுத்துதல்‘ எனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அர்த்தமிகு தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் நற்சேவையைச் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் கொண்டாடின.

அவ்வகையில், சமூகத்தில் உள்ளோருக்கு நீதி சென்றடைய முக்கியப் பங்காற்றிய 27 நீதிமன்றத் தொண்டூழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

மேலும், மரண தண்டனைக்கான சட்ட உதவித் திட்டம் (லாஸ்கோ) தொடர்பில் 25 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் சேவையாற்றிய வழக்கறிஞர்களின் தொண்டூழியத்தை அங்கீகரித்து வழங்கப்படும் ‘நீண்டகாலச் சேவை விருது’ இந்த ஆண்டு இருவருக்கு வழங்கப்பட்டது.

நீதிக்கான நற்சேவைக்காக வழங்கப்பட்ட இந்த உச்ச விருதைத் திரு அழகர்சாமி பழனியப்பன், திரு மஹாதேவன் இலச்சுமாயா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மதிப்புமிகு தொண்டூழியச் சேவையால் சிறப்பான பங்களிப்புகளை அளித்தவர்களுக்கு தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் விருது வழங்கிச் சிறப்பித்தார்.

நீதிமன்றத் தொண்டூழியர்கள் மத்தியில் உரையாற்றிய திரு மேனன், ‘‘தொண்டூழியர்கள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், பல வழிகளில் நீதிமன்றங்களுக்கு உதவினாலும், சக சிங்கப்பூரர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழியைச் சாத்தியப்படுத்தும் ஆர்வத்தாலும் அர்ப்பணிப்பாலும் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்,’’ என்று கூறினார்.

இதன்வழி, தொண்டூழியர்கள் தங்களின் நேரம், ஆற்றல், நிபுணத்துவத்தை வழங்கி நீதித்துறையின் பணிகளை ஆதரிக்க முன்வந்ததற்கும் உளமார நன்றிகூறுவதாகவும் திரு மேனன் தெரிவித்தார்.

தலைசிறந்த கடப்பாட்டுடன் இலவசச் சட்ட சேவை நல்கியதற்காக அரசு நீதிமன்றத்தைச் சேர்ந்த இரு தொண்டூழியர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

மேலும், நீடித்த அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக 23 அரசு நீதிமன்ற தொண்டூழியர்களும் நிகழ்ச்சியில் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்