பொருளியல் வளர்ச்சி மட்டுமன்று, சிங்கப்பூரர்களின் வளமான வாழ்வே இலக்கு: பிரதமர் வோங்

பொருளியல் வளர்ச்சி மட்டுமன்று, சிங்கப்பூரர்களின் வளமான வாழ்வே இலக்கு: பிரதமர் வோங்

படம்: பே. கார்த்திகேயன்

25 Oct 2026 - 11:50 am

3 mins read

நாட்டின் பொருளியல் முன்னேற்றம் நேரடியாக சிங்கப்பூரர்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்று மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமைச் செயலாளரும் நாட்டின் பிரதமருமான லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை தொடங்கிய மசெக மாநாடு, விருதுகள் நிகழ்ச்சி 2026ல் ஏறத்தாழ 3,000 கட்சித் தொண்டர்கள், ஆர்வலர்கள் மத்தியில் தமிழ் உட்பட அதிகாரத்துவ மொழிகளில் வணக்கம் கூறியவாறு பேசத் தொடங்கிய திரு வோங், சென்ற ஆண்டின் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கட்சி மாநாடு இது என்பதை குறிப்பிட்டவாறு உரையைத் தொடங்கினார்.

தொடக்கத்தில், கட்சியின் மூத்த தோழர்களின் நீண்டகால அர்ப்பணிப்புக்கு மலாய் மற்றும் மாண்டரின் மொழிகளில் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார்.   

ஆணை என்பது உரிமையன்று, பொறுப்பு

“சிங்கப்பூரர்கள் நமக்கு ஆட்சி செய்ய வலுவான ஆணையை மீண்டும் வழங்கியுள்ளனர்; அவர்களின் நம்பிக்கைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று தொடங்கிய திரு வோங், “ஆனால், ஆணை என்பது ஓர் உரிமை அல்ல; அது ஒரு பொறுப்பு. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், சவால்களைத் தீர்த்து நாட்டை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதுமே அந்தப் பொறுப்பு” என்றார்.   

சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அந்த நம்பிக்கையின் மீது நிரந்தர உரிமை இல்லை என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், ஒவ்வொரு தலைமுறை மசெக தலைவர்களும் தொண்டர்களும் அதை மக்களிடம் உழைத்துப் புதிதாகப் பெற வேண்டும் என்றார்.

மக்கள் நலனைக் கேட்டு நிறைவேற்றுவது, உயர்ந்த தரத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் சிங்கப்பூரர்களுக்கு எப்போதும் முதலிடம் அளிப்பதே ஆளும் மசெகவின் இலக்கு எனத் தெரிவித்தார்.   

முன்னோக்கிச் செல்லும் பாதை

முன்னோக்கிச் செல்லும் பாதை எளிதானது அல்ல என்றும், உலகம் மிகவும் ஆபத்தானதாகவும் சிக்கலானதாகவும் மாறியுள்ளது என்றும் குறிப்பிட்ட பிரதமர், சிங்கப்பூர் இந்தச் சவால்களை ஒரு வலுவான நிலையிலிருந்தே எதிர்கொள்கிறது என்றார்.   

குறிப்பாக, கடந்த மாதம் ’’எஃப்1’’ போட்டிகளின்போது பகுதி மின்கடத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனர்களின் நிறுவனர்களைச் சந்தித்ததை அவர் நினைவுகூர்ந்தார். ‘ஓபென் ஏஐ‘  போன்ற முன்னணி ஏஐ நிறுவனங்கள் சிங்கப்பூரில் அலுவலகங்களை அமைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் உள்ளூர்வாசிகளுக்கு அதிக முதலீடுகளும் சிறந்த வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றார்.   

அதிபர் தர்மனின் சுவீடன் அரசுமுறைப் பயணம், மற்றும் தமது கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் பயணங்களைக் குறிப்பிட்ட திரு வோங், பிளவுபட்ட உலகச் சூழலிலும் சிங்கப்பூர் மீது அனைத்துலகச் சமூகம் வைத்துள்ள நற்பெயர் நாட்டின் பெரிய சொத்து என்றார்.   

புள்ளிவிவரங்கள் மட்டுமே முழு கதையையும் சொல்லாது

பொருளியல் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் மட்டும் முழு நிலவரத்தையும் பிரதிபலிக்காது என்பதை சொன்ன பிரதமர், சில துறைகள் வளர்ச்சியடைந்தாலும் சில துறைகள் நெருக்கடியைச் சந்திக்கின்றன என்றார். 

‘‘குறிப்பாக, குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் 40, 50 வயதில் வேலை இழக்கும் சிங்கப்பூரர்களின் பணிப் பாதுகாப்பு வாழ்க்கைச் செலவினக் கவலைகளை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளதாகவும், அவற்றுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார் திரு வோங்.   

“கட்சியின் பணி பொருளியலை வளர்ப்பது மட்டுமன்று; அந்த வளர்ச்சி அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கையாக மாறுவதை உறுதி செய்வதே ஆகும்,” என்று பிரதமர் வோங் திட்டவட்டமாகக் கூறினார்.   

குறிப்புச் சொற்கள்
மசெகசிங்கப்பூர்லாரன்ஸ் வோங்அரசியல்மாநாடு