சிங்கப்பூர் ஊழியர்களிடம் வேலை, மனநல அச்சம் அதிகரிப்பு: ஆய்வறிக்கை

3 mins read
21c5090b-e9d4-45b4-9c94-9d29c3bf0757
சிங்கப்பூர் ஊழியர்களில் பலர் வேலையில் முழு மனநிறைவு காணாவிட்டாலும் வேலையைவிட்டு வெளியேற அஞ்சுவதாகச் சொல்லப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஊழியர்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்திலேயே நீடிக்கத் திட்டமிட்டிருந்தாலும் 73 விழுக்காட்டினர் மறைமுகமாக வேறு வேலைவாய்ப்புகளைத் தேடிவருவதாக அண்மைக் கருத்தாய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற 515 சிங்கப்பூரர்கள் தங்களின் வேலை மனநிறைவு, நலன், நம்பிக்கை, ஆகியவற்றை ஒட்டி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

‘மேன்பவர் குரூப்’ நிறுவனம் வெளியிட்ட ‘குளோபல் டேலன்ட் பாரோமீட்டர்’ எனும் அதன் ஆய்வறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அறிக்கையின்படி, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மதிப்பெண் 63 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிடச் சற்றுத் தொய்வடைந்த நிலையாகும்.

சிங்கப்பூரின் ஊழியர் மனநிலை சற்று பலவீனமடைந்துள்ளதை இது காட்டுகிறது. சிங்கப்பூரில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக இருந்தாலும், ஊழியர்களின் மனநலம், வேலைப் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துவிட்டன.

‘ஜாப் ஹக்கிங்’ எனும் வேலையை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் போக்கு ஊழியர்களிடையே காணப்படுகிறது.

சிங்கப்பூர் ஊழியர்களில் பலர் வேலையில் முழு மனநிறைவு காணாவிட்டாலும் வேலையைவிட்டு வெளியேற அஞ்சுகின்றனர். 39 விழுக்காட்டினர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தங்கள் வேலை போகக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

மேலும், 58 விழுக்காட்டினர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தங்கள் வேலையைப் பறித்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

மனநலத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்

பணியிட மனச்சோர்வு அதிகமாகவே காணப்படுகிறது. 53 விழுக்காட்டினர் அன்றாடம் பணியிடத்தில் மனச்சோர்வை எதிர்நோக்குவதாகக் கூறினர்.

சிங்கப்பூரில் 72 விழுக்காட்டு ஊழியர்கள் வேலைப்பளு, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது உலகளாவிய சராசரியைவிட அதிகம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் அரவிந்தர குமரன், 27, செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் வேலை போய்விடுமோ என்ற அச்சம் பலரையும் தொற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கும் பொறுப்புகளில் ஈடுபடுவதாலும், தம்மைப் போன்ற ஊழியர்களுக்கான தேவை அதிகம் இருப்பதாலும் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் சொன்னார்.

தற்போதைய பணியிடத்தில் நீண்ட நாள் நிலைத்திருக்க விரும்பும் திரு குமரன், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்.

ஊழியர்கள் அதை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர அதை அதிகம் நம்பியிருக்கக்கூடாது என்கிறார் அவர். வேலையால் அதிக மனச்சோர்வு அடைவதாகக் கூறும் அவர், அதனைக் கையாள முயன்று வருகிறார்.

ஊழியர்களின் எதிர்பார்ப்பு

துணை மனிதவள மேலாளராக இருக்கும் ஷெர்லி ஜெனிபர், 44, சம்பளத்திற்கு அப்பாற்பட்டு ஊழியர்கள், வேலை - வாழ்க்கைச் சமநிலை, நீக்குப்போக்கான பணியிடம், தங்களின் நலனில் அக்கறைகொள்ளும் பணியிடம் போன்றவற்றை ஒரு நிறுவனத்தில் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு மனிதவளத்துறைப் பணியாளராக எவ்விதப் பொய்யான வாக்குறுதிகளையும் அளிப்பதைவிட, ஊழியர்களின் கவலைகளைப் புரிந்துகொண்டு பொறுப்புணர்வுடன் அவர்களுடன் வெளிப்படையாகக் கலந்துரையாடி நம்பிக்கையையும் மனரீதியில் பாதுகாப்பான சூழலையும் உருவாக்குவதே தமது நோக்கம் என்றார் ஷெர்லி.

செயற்கை நுண்ணறிவு குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், தெளிவான நோக்கம், வலுவான நிர்வாக நெறிமுறைகள், ஊழியர்களுக்கு உண்மையான ஆதரவு ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தினால் மட்டுமே நம்பிக்கை வரும் என்று சொன்னார்.

வேகமான செயற்கை நுண்ணறிவு மாற்றத்தால் பின்தங்கியிருப்பதாகவோ அல்லது அச்சுறுத்தப்பட்டதாகவோ உணரும் ஊழியர்களுக்கு, வெறும் வேகத்தையோ தொழில்நுட்ப அமலாக்கத்தையோ முன்னிறுத்தாமல், அனைவரையும் உள்ளடக்குதல், நம்பிக்கையூட்டுதல், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் ஊழியர்களுக்கு சிறந்த ஆதரவை மனிதவளத் துறையினரால் வழங்க முடியும் என்கிறார் ஷெர்லி.

ஊழியர் பற்றாக்குறை, கலப்பு வேலைமுறை, வேலையில் தெளிவின்மை, நிர்வாகத் திறன் குறைபாடு ஆகியவை ஊழியர்கள் பணியிடத்தில் மனச்சோர்வு அடைய முக்கிய காரணிகள் என்று அவர் கருதுகிறார்.

ஐந்தாண்டுகளாக உற்பத்திப் பொறியாளராகப் பணியாற்றும் லோஷினி குமார், 29, வேலை போய்விடுமோ என அச்சப்படவில்லை.

செயற்கை நுண்ணறிவைப் பணியிடத்தில் பயன்படுத்தும் அவர், அது பல வழிகளில் மனிதனுக்கு உதவி வந்தாலும் அது இன்னும் சில அம்சங்களில் திறம்படச் செயல்படலாம் என்கிறார்.

தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வந்தாலும் மனிதத்தன்மை கலந்த அணுகுமுறை இன்றியமையாத ஒன்று என்கிறார் லோஷினி.

14 ஆண்டுகளாக மருந்தாளராகப் பணிபுரியும் பிரவீனா கந்தசாமி, 37, தமது வயதாலும் வேலை அனுபவத்தாலும் தற்போது வேலைமீது கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய வேலையைவிட சிறந்த வாய்ப்பும், கூடுதல் சம்பளமும் கிடைக்கும் ஒரு வேலை கிடைத்தால் மட்டுமே வேலை மாறுவேனே தவிர, தற்போதைக்கு அத்தகைய எண்ணம் இல்லையென்று பிரவீனா சொன்னார்.

தமது பணியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகம் இல்லை எனக் கருதும் அவர், அந்தத் தொழில்நுட்பம் வழங்கும் தகவல் சரியானதா என்று ஆராயாமல் அதைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தக்கூடாது என்றார்.

குறிப்புச் சொற்கள்