ஒட்டுமொத்த வேலைக் கட்டமைப்பு மேம்படவேண்டும்: தினேஷ் வாசு தாஸ்

ஒட்டுமொத்த வேலைக் கட்டமைப்பு மேம்படவேண்டும்: தினேஷ் வாசு தாஸ்

3 mins read
24da44d9-0094-4232-ae9d-51fc6c326180
உலக மூப்படைதல் விழாவில் ‘ஏஜிங் ஏசியா’ பங்காளிகளுடனும் தொண்டூழியர்களுடனும் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: மனிதவள அமைச்சு

இன்று வேலை வழங்குவோரில் பெரும்பாலோர் பாரம்பரிய வேலை முறைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றும் மூத்தோரின் வாழ்க்கைத்தொழிலில் ஏற்படும் பணி மாற்றங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.

இது வெற்றிகரமாக அமைந்தால் மேலும் விரிவுபடுத்தக்கூடிய, புதுமையான, நடைமுறைக்குச் சாத்தியமான பணி மாதிரிகளைச் சோதித்துப் பார்ப்பதற்காக 30 நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் பணியாற்றுவதாக திரு தினேஷ் தெரிவித்தார்.

ஊழியர் அணியில் மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் இது எதிர்காலத்திற்குப் பொருளாதார, சமூக ரீதியான வாய்ப்பை அளிப்பதாக திரு தினேஷ் சொன்னார்.

புதன்கிழமை (15 ஏப்ரல்) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற உலக மூப்படைதல் விழாவின் இரண்டாம் நாளன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு தினேஷ் சிறப்புரையாற்றினார்.

வேலைவாய்ப்பானது மூத்தோருக்கு வருமானத்தை மட்டும் வழங்காமல் அவர்கள் ஒரு நோக்கத்துடன் செயல்படவும் தொடர்ந்து கற்கவும் வளர்ச்சியடையவும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்குமான வாய்ப்புகளையும் வழங்குவதாக வலியுறுத்தினார் திரு தினேஷ்.

“மூத்தோர் விரும்பினால் அவர்கள் வாழ்க்கைத்தொழிலைத் தொடரவும் பலதரப்பட்ட பணிப் பொறுப்புகளை மேற்கொள்ளவும் நாம் அவர்களுக்கு வாய்ப்பளிப்போம். பல தலைமுறைகளைக் கொண்ட ஊழியர் அணியை நிர்வகிப்பதில் வேலை வழங்குபவர்களுக்கு ஆதரவளிப்போம்,” என்றார் திரு தினேஷ்.

எதிர்காலத்தில் வேலையில் நீண்டகாலத்திற்குச் செயல்திறன்மிக்க வகையில் நீடிக்கும் சாத்தியம் அதிகம் இருப்பதால், சிங்கப்பூரர்கள் பல வர்த்தக, தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்வார்கள் என்று குறிப்பிட்ட திரு தினேஷ், காலப்போக்கில் அவர்களின் சொந்த வாழ்க்கை முன்னுரிமைகளும் மாறக்கூடும் என்றார்.

இதனால், சிங்கப்பூரர்கள் தங்களது வாழ்க்கைத்தொழில், திறன்கள், பணி ஏற்பாடுகள் குறித்து அதிகப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார் திரு தினேஷ்.

பணியிடங்கள் தங்களை எவ்வாறு தகவமைத்துக்கொள்கின்றன என்பதையும் மூத்தோர் தங்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்தி எவ்வாறு தொடர்ந்து பங்களிக்க முடியும் என்பதையும் தீர்மானிப்பதில் வேலை வழங்குபவர்களும் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக திரு தினேஷ் கூறினார்.

அனுபவம் வாய்ந்த மூத்த நிபுணர்களை தேவைப்படும் நிறுவனங்களுடன் இணைப்பதன் மூலம் மூத்த நிபுணர்களால் தொடர்ந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க முடியும் என்று தெரிவித்தார் திரு தினேஷ்.

மூத்த நிபுணர்களைத் தொடர்ச்சியாகவோ முழுநேர அடிப்படையிலோ பணியமர்த்துவதற்கான வளங்கள் அல்லது தேவைகள் இல்லாத சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இது குறிப்பாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

“வாழ்க்கைத்தொழில் நீடிப்பதால் பணி மாற்றங்களைக் கையாள்வது மிகவும் முக்கியமாகிவிடும். ஊழியர்கள் தங்களது வாழ்க்கைத்தொழில் மாற்றங்களைத் திட்டமிட தெளிவான பாதைகள் இல்லாமல் இருந்தாலோ வயதுக்கு ஏற்ற பணியிட வடிவமைப்பை எங்குத் தொடங்குவது என்று வேலை வழங்குபவர்களுக்குத் தெரியாமல் இருந்தாலோ ஆதரவு நடவடிக்கைகள் நாம் விரும்பும் அளவிற்கு எப்போதும் திறம்படச் செயல்படாமல் போகலாம். எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் இவையே,” என்று விளக்கினார் திரு தினேஷ்.

வேலையில் நீண்டகாலத்திற்குச் செயல்திறன்மிக்க வகையில் நீடிக்க ஆதரவளிப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மூத்த ஊழியர்களின் வேலை நியமனத்திற்கான முத்தரப்புப் பணிக்குழு ஆய்வு செய்து வருவதாக திரு தினேஷ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்