சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் நான்கு ஆண்டுகள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு உட்புறக் கட்டுமான நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட $10 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் $34 மில்லியனுக்கும் மேல் மதிப்புள்ள 12 ஏலக்குத்தகைகள் தொடர்பில் திட்டம் தீட்டி ஏமாற்ற, ஐந்தாண்டுகளுக்கும் மேல் ஒன்றுசேர்ந்து செயல்பட்டன.
முன்னதாக ‘ஃபெசிலிட்டி லிங்க்’ என்று அழைக்கப்பட்ட ‘ஃபிளக்ஸ் கனெக்ட்’ நிறுவனத்துக்கு $4,885,263 அபராதமும் ‘டார்கஸ் இன்டீரியர்ஸ்’ நிறுவனத்துக்கு $5,113,918 அபராதமும் விதிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
ஏலக்குத்தகைகள் தொடர்பில் சூழ்ச்சி செய்ததற்காக ஆணையம் விதித்துள்ள ஆகப் பெரிய தண்டனை இது.
அந்த ஏலக்குத்தகைகள் அலுவலகங்கள், சில்லறை இடங்கள், உணவு, பானக் கடைகள் உள்ளிட்ட குடியிருப்பு அற்ற சொத்துகளில் உட்புறக் கட்டுமானப் பணிகளுக்கானவை.
கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை குத்தகைகள் தொடர்பாக ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு $150,000க்கும் $7.7 மில்லியனுக்கும் இடைப்பட்டிருந்தன.
ஏமாற்றி நடந்த ஏலக்குத்தகைகளால் பாதிக்கப்பட்ட வளாகங்களில், ‘ஓஷியன் ஃபைனான்ஷியல் சென்டரின் பியோர் ஃபிட்னஸ்’ உடற்பயிற்சிக் கூடம், ‘சிட்டிபேங்க்கின்’ சாங்கி வர்த்தகப் பூங்கா உள்ளிட்டவையும் அடங்கும்.
அதிக மதிப்புடைய குத்தகைகளை எடுக்கக்கூடிய 44 நிறுவனங்களில் அந்த இரண்டு நிறுவனங்களும் உள்ளடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
கட்டட, கட்டுமான ஆணையத்தின் பதிவு முறையின்கீழ், உட்புறப் புதுப்பிப்புக்கும், இறுதிச் சீராக்கப் பணிகளுக்கும் வரையறுக்கப்படாத ஒப்பந்தப் புள்ளி மதிப்பைக் கொண்ட அரசாங்கத் திட்டங்களுக்கு இந்த நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்நிலையில், எந்தவோர் அரசாங்கத் திட்டமும் பாதிக்கப்படவில்லை என்று ஆணையத்தின் சட்ட, அமலாக்கத் துறை உதவி இயக்குநர் இங் யீ டிங் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.

