பிடாடரி வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் குறைந்தபட்ச வசிப்புக் காலமான ஐந்து ஆண்டுகளை அண்மையில் நிறைவு செய்த அடுக்குமாடி வீடு ஒன்று, $1.15 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.
‘அல்காஃப் ஒயேசிஸ்’ குடியிருப்பில் புளோக் 111A அல்காஃப் கிரசெண்ட்டில் அமைந்துள்ள நான்கறை வீவக மறுவிற்பனை வீடு ஒன்று ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக விற்கப்பட்டிருப்பது அந்த வட்டாரத்தில் உள்ள வீடுகளை வாங்க பலர் ஆர்வமாக இருப்பதைக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
$1.15 மில்லியனுக்கு விற்கப்பட்ட வீடு, 17 மாடிக் கட்டடத்தின் 10 முதல் 12வது மாடிக்கு இடைப்பட்ட நடுத்தர உயரத்தில் அமைந்துள்ளது. இந்த வீடு மிக உயர்ந்த மாடியில் அமையவில்லை என்றபோதிலும், இதன் சன்னல் மற்றும் பால்கனி வழியே பள்ளிகள் மற்றும் நிலப்பகுதி வீடுகள் தெரிவதால், எவ்விதத் தடங்கலும் இல்லாத பரந்த வெளியைக் காண முடியும். இத்தகைய திறந்தவெளிக்காட்சி அண்மைக்காலப் புதிய வீடமைப்புப் பேட்டைகளில் வீடுகள் வாங்குபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஏறத்தாழ 1,001 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடு, சதுர அடிக்கு ஏறத்தாழ $1,148 என்ற விலையில் கைமாறியுள்ளது. இந்தக் குடியிருப்பு இந்த ஆண்டுதான் அதன் குறைந்தபட்ச வசிப்புக் காலத்தை நிறைவு செய்தது என்பதால், இந்த வீட்டுக்கு இன்னும் 94 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை நீண்டகாலக் குத்தகை எஞ்சியுள்ளது.
தோ பாயோ போன்ற முதிர்ச்சியடைந்த பழைய வீடமைப்புப் பேட்டைகளில் குத்தகைக்காலம் குறைந்து வருவது வீடு வாங்குவோர் சிலருக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிடாடாரியில் உள்ள நீண்ட குத்தகைக்காலம் அதன் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) திட்டத்தின்கீழ் பிடாடாரி வீவக வீடுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது, இத்தகைய நான்கறை வீடுகள் $440,000 முதல் $521,000 வரையிலான விலையில் விற்கப்பட்டன.
நடுத்தர மாடியில் அமைந்துள்ள இந்த வீட்டின் கொள்முதல் விலை தோராயமாக $475,000 முதல் $495,000 வரை இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில், முகவர் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்குப் பிறகு, வீட்டின் உரிமையாளர் சுமார் 132 விழுக்காடு மூலதன லாபத்தை எட்டி, கிட்டத்தட்ட $640,000 லாபம் ஈட்டியிருக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

