சிறிய நாடுகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பெரிய நாடுகள் நடக்கவேண்டும்: அமைச்சர் சான்

சிறிய நாடுகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பெரிய நாடுகள் நடக்கவேண்டும்: அமைச்சர் சான்

2 mins read
2e306264-8d25-4abf-b6e8-4ef121844a0d
பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் சியாங்ஷான் மாநாட்டில் உரையாற்றிய தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: தற்காப்பு அமைச்சு

உலகளாவிய அதிகாரப் பரவல் மாறி வரும் வேளையில், சிறிய நாடுகள் பாதுகாப்பின்மையை உணரக்கூடும். அதனால், சிறிய நாடுகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, அவற்றுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பெரிய நாடுகள் நடக்கவேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் சியாங்ஷான் மாநாட்டில் உரையாற்றிய போது இக்கருத்தை அவர் வலியுறுத்தினார்.

சீன தற்காப்பு அமைச்சின் அழைப்பை ஏற்று செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அமைச்சர் சான் சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

“பெரிய நாடுகளின் பொறுப்பான நடவடிக்கைகளால், சிறிய நாடுகளின் கவலைகள் பெருமளவு குறையும்,” என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

மற்ற நாடுகளின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தாமல், நாடுகள் தங்கள் சொந்தப் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து அவர் பேசினார்.

வெற்றி என்பதற்கான அர்த்தத்தை நாடுகள் மாற்றியமைக்க வேண்டும் என்ற திரு சான், “மற்றவர்களை ஆயுத பலத்தால் முறியடிப்பது மட்டும் வெற்றியல்ல. நமது முன்மாதிரியான செயல்பாடுகளின் மூலம் உலகத்தை வெல்வதே உண்மையான வெற்றியாகும்,” என்றார் அவர்.

சீனத் தத்துவ ஞானியான மெங் ஸியின் வரிகளை மேற்கோள் காட்டி பேசிய அமைச்சர் சான், “பலத்தால் மற்றவர்களை அடிபணிய வைக்கலாம், ஆனால் பரஸ்பர நம்பிக்கையே உண்மையான வெற்றியைத் தரும்,” என்றார்.

“நாடுகள் உடனடி நெருக்குதல்களுக்கு அவசரப்பட்டுப் பதிலடி கொடுப்பதைத் தவிர்த்து, நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அத்தகைய உத்திபூர்வ பொறுமையின் மூலம் நாடுகள் தங்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க முடியும்,” என்று திரு சான் குறிப்பிட்டார்.

சீனாவுடனான சிங்கப்பூரின் உறவைச் சுட்டிக்காட்டிய அவர், நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் இருந்தாலும், இருதரப்பு நன்மைகளுக்காக இணைந்து செயல்பட முடியும் என்றார்.

மாநாட்டில் நூற்றுக்கணக்கான தற்காப்பு, அரசதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய சீனத் தற்காப்பு அமைச்சர், நாடுகள் மோதல்களைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை, பங்காளித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய பாதுகாப்பு அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்
சான் சுன் சிங்தற்காப்புசீனா