ஜோகூர் பாலத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் பெரிய முதலை ஒன்று நீந்திச் சென்றதை ஜோகூர் பாருவுக்குக் காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் கண்டு அதைக் காணொளி எடுத்தார்.
டிசம்பர் 18ஆம் தேதியன்று பிற்பகல் 3.20 மணி அளவில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் திரு கிறிஸ்டஃபர் பே சிக்கிக்கொண்டார்.
காரில் இருந்தபோது கடலில் ஏதோ மிதந்து சென்றது அவர் கண்ணில் தென்பட்டது.
அது பெரிய மரப்பலகையைப் போல இருந்ததாகவும் அது நகர்ந்த பிறகே அது ஒரு முதலை என்று தமக்கும் தமது நண்பர்களுக்கும் தெரியவந்ததாகவும் திரு பே கூறினார்.
“கிராஞ்சி வட்டாரத்தில் முதலைகள் இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் ஜோகூர் பாலம் அருகில் இரண்டு மீட்டரிலிருந்து இரண்டரை மீட்டர் வரை நீளமுள்ள முதலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம்,” என்று மதர்ஷிப் ஊடகத்திடம் திரு பே கூறினார்.
‘எஸ்டுவாரின்’ எனப்படும் கடல்வாழ் முதலைகள் சிங்கப்பூரின் சுங்கை புலோவில் உள்ளன.
ஆனால் இவற்றை ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை, பாசிர் ரிஸ் கடற்கரை, வெஸ்ட் கோஸ்ட் கடற்கரை ஆகிய இடங்களிலும் சிலர் பார்த்திருக்கின்றனர்.

