தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேலும் மூன்று நகரங்களுக்குச் செல்ல செல்வந்தர் ஓங் பெங் செங்கிற்கு அனுமதி

2 mins read
fc1640f2-418f-4feb-9540-649223a6c98c
தற்போது வெளிநாட்டில் இருக்கும் செல்வந்தர் ஓங் பெங் செங் மேலும் மூன்று நகரங்களுக்குச் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டில் தற்போதிருக்கும் செல்வந்தர் ஓங் பெங் செங், மேலும் மூன்று நகரங்களுக்குப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் அவர் இருப்பதற்கு விதிக்கப்பட்ட கால வரையறையில் எந்த மாற்றமும் இல்லை.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுடன் தொடர்புடைய வழக்கில் சம்பந்தப்பட்ட ஓங், ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்து மே 16ஆம் தேதிவரை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பணிக்காகவும் மருத்துவக் காரணங்களுக்காகவும் பயணம் செய்ய இதற்கு முன் அனுமதி வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (மே 9) வெனிஸ், இத்தாலியில் உள்ள பாரி, குரோவே‌ஷியாவில் உள்ள டுப்ரோவ்னிக் ஆகிய கூடுதல் நகரங்களுக்குப் பயணம் செய்ய ஓங் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை நீதிமன்றப் பேச்சாளர் பகிர்ந்துகொண்டார்.

ஓங்கின் பிணைக்கான நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

79 வயது மலேசியரான ஓங், எங்கு தங்குகிறார், தொடர்பு எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் விசாரணை அதிகாரியிடம் தரவேண்டும். விசாரணை அதிகாரி எப்போதும் தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் ஓங் இருக்கவேண்டும்.

சிங்கப்பூருக்குத் திரும்பிய 24 மணி நேரத்தில் ஓங் அவரது கடப்பிதழையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.

ஓங்கிற்கு விதிக்கப்பட்ட $800,000 பிணைத் தொகை $1.6 மில்லியனுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு அதிகாரபூர்வ வகையில் சம்பந்தப்பட்டவரிடமிருந்து விலையுயர்ந்த பொருளை வாங்கிய குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை ஓங் எதிர்கொள்கிறார்.

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை 2008ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு அறிமுகப்படுத்தியவர் ஓங். அப்போதிருந்த எஃப் ஒன் குழுவின் தலைவராக ஈஸ்வரன் பொறுப்பு வகித்தார்.

குறிப்புச் சொற்கள்