உயிர்மருந்தியல் உற்பத்தியில் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டம்

உயிர்மருந்தியல் உற்பத்தியில் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டம்

3 mins read
உயிர்மருந்தியல் துறை சார்ந்த உள்நாட்டுத் திறன்களை வளர்க்கும் திட்டம்
a70b557a-bb43-4917-b5af-98ec6923adee
ஜனவரி 9ஆம் தேதி ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொது வரவேற்பு விழாவின் தொடக்க நாளில் இப்புதிய திறன் மேம்பாட்டுத் திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. - படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி
Google News Preferred Icon

சிங்கப்பூரில் விரைவாக வளர்ச்சி கண்டுவரும் உயிர்மருந்தியல் உற்பத்தித் துறையில் பணியாற்ற, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களைத் தயார்படுத்தும் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டம் ஜனவரி 9ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

ஜனவரி 9 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்ற ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொது வரவேற்பு விழாவில் இத்திட்டம் அறிமுகம் கண்டது.

இத்திட்டத்தை ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, உயிர்மருந்தியல் உற்பத்தியாளர் ஆலோசக மன்றத்துடன் (பிஎம்ஏசி) இணைந்து, சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவுடன் வழங்குகிறது.

இதன்வழி, 2025 கல்வியாண்டுமுதல் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களில் சிலர், உயிர்மருந்தியல் உற்பத்தித் துறையில் 36 வார நீட்டிக்கப்பட்ட வேலைப்பயிற்சி பெறுவர்.

‘பிஎம்ஏசி’யிலுள்ள 16 உயிர்மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் அந்த வேலைப்பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கவுள்ளன.

“இதனால், அத்துறையில் மாணவர்களுக்கு ஆழமான அனுபவமும் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்,” என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பயன்முறை அறிவியல் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் மாலினி தியாகேசன்.

மேலும், அதே நிறுவனத்தில் வெவ்வேறு பிரிவுகளிலும் மாணவர்கள் பயிற்சி பெறலாம்.

நிறுவனங்களும் திறன்மிக்க மாணவர்களைக் கண்டறிந்து வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக இது அமையும்.

ஆயிரம் மாணவர்கள் இலக்கு

சிங்கப்பூரின் பலதுறைத் தொழிற்கல்லூரிகளின் மத்தியில் இத்தகைய திட்டம் அறிமுகமாவது இதுவே முதன்முறை.

“2025ல், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் மருந்தியல் அறிவியல் மற்றும் மின்னியல், மின்னணுவியல் துறைகளில் பயிலும் மாணவர்கள் கிட்டத்தட்ட 360 பேர் இந்த வேலைப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் ஆர்வம், மதிப்பெண், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் 30 பேரைத் வேலைப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுப்போம்.

“அடுத்த ஆண்டு பயன்முறை அறிவியல் பள்ளியிலிருந்து இன்னும் மூன்று பட்டயங்களும் பொறியியல் பள்ளியிலிருந்து மற்றொரு பட்டயமும் பயில்வோர் இத்திட்டத்தில் இணைவார்கள். 2027ல் மேலும் மூன்று பட்டயங்களைச் சேர்த்து, இத்திட்டத்திற்குக் கிட்டத்தட்ட 1,000 பேர் தகுதிபெறுவர்,” என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பயன்முறை அறிவியல் பள்ளியின் இயக்குநர் லிம் பூன் வாட்.

எனினும், மற்ற பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் இத்திட்டத்தில் பங்குபெற வாய்ப்புகள் உண்டு என்றார் அவர்.

“சில நிறுவனங்களுக்கு மற்ற பள்ளி மாணவர்களின் திறன்களும் தேவைப்படலாம்,” என அவர் கூறினார்.

‘பிஎம்ஏசி’ உறுப்பினர்களில் ஒன்றான உயிர்மருந்தியல் உற்பத்தி நிறுவனமான ‘லோன்சா’வில் 20 வார வேலைப்பயிற்சி பெற்ற ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி தஸ்னீம் முஜிபூ, 19, இத்தகைய வேலைப்பயிற்சிகளின் பலன்களை விளக்கினார்.

உயிர்மருந்தியல் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் 20 வார வேலைப்பயிற்சி மேற்கொண்ட ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி தஸ்னீம் முஜிபூ, 19.
உயிர்மருந்தியல் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் 20 வார வேலைப்பயிற்சி மேற்கொண்ட ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி தஸ்னீம் முஜிபூ, 19. - படம்: ரவி சிங்காரம்

“அனைத்துலக அறிவியலாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த அனுபவத்தால், பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் எதிர்காலத்தில் உயிர்மருந்தியல் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார் தஸ்னீம்.

இத்திட்டம் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களையும் சென்றடையும். அவர்களுக்கு வேலைசார்ந்த வழிகாட்டுதல், நிறுவனத்தில் கற்றல் பயணங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

2023ல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6 விழுக்காடு, உயிர்மருத்துவ அறிவியல் துறைகளைச் சார்ந்தது; கிட்டத்தட்ட 38 பில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருள்களை உலகச் சந்தைக்காக சிங்கப்பூர் உற்பத்திசெய்திருந்தது.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொது வரவேற்பு விழா

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொது வரவேற்பு விழாவின் முதல் நாளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பலரையும் ஆசிரியர்கள் அழைத்து வந்திருந்தனர். பல புதிய தொழில்நுட்பங்களும் கண்கவர் படைப்புகளும், புத்தாக்க அம்சங்களும் காட்சிக்கு இருந்தன. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் எந்தப் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு விண்ணப்பிப்பது என்ற குழப்பத்துக்குத் தீர்வுகாணவும் மாணவர்கள் வந்திருந்தனர்.

நண்பர்கள் நவேத் அஹ்மது (இடம்), முகமது ஃபர்ஹான்.
நண்பர்கள் நவேத் அஹ்மது (இடம்), முகமது ஃபர்ஹான். - படம்: ரவி சிங்காரம்

பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைத் திட்டம்வழி இவ்வாண்டு தம் படிப்பைத் தொடரவுள்ள நண்பர்கள் முகமது ஃபர்ஹான், நவேத் அஹ்மது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு வந்திருந்தனர்.

“நான் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நிதித் தொழில்நுட்பம் பயிலத் தீர்மானித்துள்ளேன்,” என்றார் ஃபர்ஹான்.

“நான் எதிர்காலத்தில் விமானியாக விரும்புகிறேன். விமானவியல் நிர்வாகம், சிங்கப்பூர் இளையர் விமானக் குழுச் சாவடிகள் என்னைக் கவர்ந்தன,” என்றார் நவேத்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இயந்திர மனிதன் மாணவர்களைப் பரவசப்படுத்தியது. படத்தில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தொடர்ச்சியான கற்றல், பயிற்சிப் பிரிவின் தலைவர் கே ராமமூர்த்தி பிபிஎம் (வலமிருந்து இரண்டாவது).
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இயந்திர மனிதன் மாணவர்களைப் பரவசப்படுத்தியது. படத்தில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தொடர்ச்சியான கற்றல், பயிற்சிப் பிரிவின் தலைவர் கே ராமமூர்த்தி பிபிஎம் (வலமிருந்து இரண்டாவது). - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்
கல்விதிறன் மேம்பாடுஉயிரியல்