சிகிச்சைத் துறைக்கு சிறகுகளை விரித்த தொழில்நுட்பப் பிரபலம்

2 mins read
ae9e33bf-1ec3-4a21-9728-67283cd5884b
ஓ2 லேப் நல்வாழ்வு மருந்தகத்தின் இணை நிதி ஆதரவாளர்கள் எட்மண்ட் லீ, 65, விக்னேச மூர்த்தி, 51. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழில்நுட்பத்தில் பிரபலமடைந்த ஒருவர் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார்.

சிங்கப்பூரில் இணையச் சேவை வழங்கும் வியூகுவெஸ்ட் (ViewQwest) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான விக்னேச மூர்த்திதான் அந்தச் செயலுக்குச் சொந்தக்காரர்.

2024ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி உலக அளவில் $1.8 டிரில்லியன் சந்தையைக் கொண்டது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை. லாபகரமான அந்தத் துறையில் 2024 டிசம்பரில் காலடி எடுத்து வைத்தார் திரு மூர்த்தி.

ஓ2 லேப் (O2 Lab) என்னும் நல்வாழ்வு மருந்தகத்தை ரிவர்சைட் பாய்ண்ட்டில் அவர் தொடங்கினார். ஏறக்குறைய $1 மில்லியன் முதலீட்டிற்கு பிரபல வங்கியாளரான எட்மண்ட் லீ இணை ஆதரவு வழங்கினார்.

காப்ஸ்யூல் வடிவிலான உலோக சிகிச்சை அறைகள் மூன்று அந்த மருந்தகத்தில் உள்ளன. ஹைபர்பேரிக் பிராணவாயு சிகிச்சை (HBOT) வழங்கக்கூடிய அந்த அந்த அறை ஒவ்வொன்றையும் நிறுவ, இருக்கைகளைப் பொறுத்து $100,000க்கு மேல் செலவாகும்.

ஒன்று, இரண்டு மற்றும் நான்கு இருக்கைகளைக் கொண்ட மூன்று அறைகள் ஓ2 லேப்பில் உள்ளன.

அழுத்தமான சூழ்நிலையில் சுத்தமான பிராணவாயு சுவாசத்தை வழங்குவது அதன் முக்கிய அம்சம்.

முக்குளிப்பாளர்கள் சாதாரணமாக எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க HBOT சிகிச்சை முறை காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திடீரென்று காது கேளாமை, கார்பன் மோனோக்சைட் நச்சு, ஆறாத புண்கள், கதிரியக்கக் காயங்கள் என பல்வேறு பிரச்சினைகளுக்கும் அந்த சிகிச்சைப் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவமனைகள் அறித்து வந்த அந்த சிகிச்சை முறை தற்போது நல்வாழ்வு மருந்தகங்களுக்கு உருமாறிச் சென்றுள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 82 வயதான தமது தாயாருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டபோது தாமும் அந்த சிகிச்சை அளிக்கும் வசதியைத் தொடங்கினால் என்ன என்ற யோசனை திரு மூர்த்திக்குள் உதயமானது.

“2020ஆம் ஆண்டு எனது தாயாருக்கு முதன்முதலாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டபோது அந்த நல்வாழ்வு சிகிச்சை முறை பற்றி கவனிக்கத் தொடங்கினேன்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் ஏற்கெனவே இயங்கி வரும் ஐந்து நல்வாழ்வு மருந்தகங்களுடன் தற்போது ஓ2 லேப்பும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஓ2 லேப்பின் சிசிச்சைக் கட்டணங்கள் இதர மருந்தகங்களைப் போல, மணிக்கு $180 என்பதில் இருந்து தொடங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்