அங் மோ கியோ அவென்யு 1ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கிற்கு அருகிலுள்ள திறந்த வெளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) நண்பகல் நேரத்தில் நீர்க்குழாயில் கசிவு ஏற்பட்டுத் தண்ணீர் வழிந்தோடியது. புளோக் 222க்கு அருகிலுள்ள புல் தரையில் மண் கலந்த நீர் நிரம்பியதைக் காட்டும் படங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பப்பட்டன. சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள நீர்க்குழாய் உடைந்தது தண்ணீர் பெருகி ஓடியதற்குக் காரணம் என்று பியூபி தெரிவித்தது.
நீர்க்குழாயிலிருந்து நீர் கசிந்தது பற்றிய தகவலைப் பொதுப்பயனீட்டுக் கழகம், நண்பகல் 12 மணியளவில் பெற்றதாகத் தனது ஃபேஸ்புக் பக்கம் வழி தெரிவித்தது.
பழுதுபார்ப்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் உடனே செய்யப்பட்டதாகக் கூறிய கழகம், இதனால் வீடுகளுக்கான தண்ணீர் விநியோகம் பாதிப்படையவில்லை எனத் தெரிவித்தது. நீர்க்கசிவுக்கான காரணம் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் பொதுப்பயனீட்டுக் கழகம் கூறியது.
எஸ்பிசி பெட்ரோல் நிலையத்திற்குள்ளும் நீர் புகுந்ததை படங்கள் காண்பிக்கின்றன. நிலையத்திற்குப் பின்னால் கார்கள் சில நிறுத்தப்பட்டிருந்தன.
குழாய் ஒன்றிலிருந்து நீர் பாய்ந்தோடி அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்ததைக் கண்டதாக புளோக் 222ல் தங்கியுள்ள திரு தேவர் என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். தண்ணீர் சாலை வரை வழிந்தோடியபோதும் அதனால் அந்தப் பகுதி அவ்வளவாக பாதிப்படைந்தது போல போலத் தெரியவில்லை என அவர் கூறினார்.
எஸ்பிசி ஊழியர்கள், நிலையத்திற்குள் நீர் வராதபடி தடுக்க துடைப்பான் கொண்டு சுத்தப்படுத்தியதை சம்பவ இடத்திற்கு வந்திருந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கண்டனர். வெள்ளப்பெருக்கு கிட்டத்தட்ட 11.45 மணிக்குத் தொடங்கியதாக அவர் கூறினார்.

