இன்னும் ஒரு வாரத்திற்குள் திரு லியான் டியன் டெங் 235வது முறையாக ரத்த தானம் செய்யவிருக்கிறார்.
சிங்கப்பூரில் அதிக அளவில் ரத்த நன்கொடை அளிப்பவர்களில் இவரும் ஒருவர். இவருக்கு வயது 61. தம்முடைய வயதில் உள்ள புதியவர்களும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்பது இவரது எதிர்பார்ப்பு.
இம்மாதம் 2ஆம் தேதி ரத்த தானம் செய்பவர்களுக்கான வயது வரம்பு 60லிருந்து 65க்கு உயர்த்தப்பட்டது. ரத்த விநியோகத்தை அதிகரிக்கவும் வயதான காலத்தில் ஆரோக்கியமாக இருக்கவும் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றத்தின்படி, ரத்த தானம் செய்ய விரும்புவோர் 66வது பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு வரை ரத்த தானம் செய்யலாம். அடுத்தடுத்து தொடர்ந்து ரத்த தானம் செய்ய விரும்புவோர் 75வது வயது வரை, அதாவது 76வது பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு வரை ரத்த தானம் செய்யலாம்.
ஆனால், ரத்த தானம் செய்ய விரும்புவோர் தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன், குறைந்தது 45 கிலோ உடல் எடையுடன் இருக்க வேண்டும். முதல் முறையாக ரத்த தானம் செய்யும் வயதானவர்களுக்குத் தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதும் குறைவாக இருப்பதாக உள்ளூர் தரவுகள் காட்டுகின்றன.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், புதிய மாற்றத்தை 2025 ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.
ஹாங்காங், தைவான், அயர்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் முதல் முறையாக ரத்த தானம் செய்வோரின் வயது வரம்பு 65லிருந்து 69க்கு உயர்த்தப்பட்டுள்ளது. டவர் டிரான்சிட் நிறுவனத்தின் வசதிகளை ஏற்பாடு செய்யும் நிர்வாகியான திரு லியான், தமது சகாக்களையும் ரத்த தானம் செய்ய ஊக்குவிப்பதாகக் கூறியுள்ளார்.
ஊட்ரமில் நடைபெற்ற ரத்த தான முகாமின்போது அவர், நண்பர்களிடம் பயப்படத் தேவையில்லை என்று கூறி தைரியமூட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது வயதில் உள்ள புதியவர்களில் சிலர் ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளதாகக் கூறிய சுகாதார அறிவியல் ஆணையம், திரு லியானைப் போன்றே மூத்தவர்கள் பலர் இதற்குப் பங்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தது.
இதற்கிடையே ரத்த தானத்திற்கு இளையர்களை ஈர்க்கும் முயற்சிகளும் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையில் யூத்இன்ஸ்பயர் மன்றத்தில் (YouthInspire) 900 பேர் பதிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டது.
2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்த மன்றம், 16 முதல் 25 வயது வரையிலான இளையர்களை ரத்த நன்கொடையளிக்க ஊக்கமூட்டுகிறது. அதற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை அது நடத்தி வருகிறது.

